உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் : திரையுலகினரின் தொடர் வாழ்த்து மழையில் விஜய்

வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் : திரையுலகினரின் தொடர் வாழ்த்து மழையில் விஜய்

எதிர்கொண்ட முதல் சட்டசபை தேர்தலிலேயே நடிகரும், தவெக., தலைவருமான விஜய், அதிகப்படியான இடங்களை பிடித்து ஆட்சி கட்டிலில் அமர உள்ளார். சரித்திர சாதனையாக பார்க்கப்படும் இந்த நிகழ்வுக்காக விஜய்க்கு நேற்று முதலே வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. திரையுலகினர் பலரும் இன்னும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ்
வெறும் அன்பு மட்டுமே கிடைப்பதன் மூலம் நீங்கள் இந்த இடத்திற்கு வரவில்லை, மாறாக, வெறுப்பையும் எதிர்கொண்டதன் மூலமே இங்கு வந்துள்ளீர்கள். அந்த இரைச்சல்களுக்கு மத்தியிலும், அத்தனை வெறுப்புகளுக்கு இடையிலும், நீங்கள் ஒருபோதும் தளரவில்லை, எப்போதும் உங்கள் கடமையைச் செவ்வனே ஆற்றினீர்கள்.

இது முழுக்க முழுக்கக் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் மீதான தீராத பற்றின் விளைவே ஆகும். நான் முன்பே கூறியது போல, நீங்கள் வெறும் ஒரு நபர் அல்ல; நீங்கள் ஒரு 'உணர்வு' ! இந்த வெற்றியானது அந்த வார்த்தைக்குக் கிடைத்த சான்றாகவும், ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும் அமைகிறது!

ஜோசப் விஜய் சார், இது மிகவும் கஷ்டப்பட்டு ஈட்டிய வெற்றி. இந்த வெற்றியின் ஒவ்வொரு துளிக்கும் நீங்களே முழுமையாகத் தகுதியானவர், தளபதி ! (இனி உங்களை வேறு விதமாக அழைக்கத் தொடங்கும் முன், கடைசியாக ஒருமுறை)

நடிகை பூஜா ஹெக்டே
ஓ மை காட்... வாழ்த்துகள் விஜய் சார்...இந்த 'தளபதி கச்சேரி, நாளுக்கு நாள் இன்னும் பிரம்மாண்டமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. இனி மேல்நோக்கிய பயணம் மட்டுமே... கொண்டாட்ட நேரம், கலக்கிடுவோம்...

நடிகர் மோகன்லால்
அன்பு விஜய், இந்த அற்புதமான வெற்றிக்கு என் வாழ்த்துகள். மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் நம்பிக்கை ஒரு உண்மையான கவுரவமாகும். சேவைக்கான இந்தப் புதிய பயணத்தை நீங்கள் தொடங்கும்போது, ​​இந்தக் கவுரவத்தை மிகுந்த பெருமையுடனும் உறுதியுடனும் நீங்கள் ஏற்றுச் சுமப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என் நல்வாழ்த்துகள்.

நடிகர் மம்முட்டி
இந்தச் சிறப்பான வெற்றிக்கு விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள். மாநிலத்தை வழிநடத்த நீங்கள் முன்னெடுத்துச் செல்லும் வேளையில், உங்களுக்கு வலிமையும் தொலைநோக்குப் பார்வையும் கிட்ட வாழ்த்துகிறோம்.

நடிகர் துல்கர் சல்மான்
விஜய் அண்ணாவுக்கு தலைமுறைகளைக் கடந்து நிற்கும் இந்த வெற்றிக்கு, என் மனமார்ந்த வாழ்த்துகள்! இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் ! இதை அவர் மிகச் சினிமாத்தனமான பாணியில் கைப்பற்றியிருக்கிறார்.

நடிகர் பார்த்திபன்
வாய் வழி காற்றை ஊதி, மெழுகுவர்த்தியின் சுடர் அணைத்து, 'happy birthday' சொல்வதைப்போல, விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது ! விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால்,ஜெயம் திரு விஜய் அவர்களால் மட்டுமே அசுர பலத்தோடு நிகழ்த்த முடியும் என்பதற்கு, தமிழக மக்கள் எண்ணிக்கையில் 108 இடங்கள் கொடுத்ததோடு, தங்களின் இதயம் என்கிற இடத்தையே சிம்மாசனமாக்கி அதில் முதல்வராக அமர, விஜய் அவர்களுக்கு அமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள். இந்த சரித்திர வெற்றியைக் கண்டுள்ள real HERO -வை விசிலடித்து கொண்டாடி வாழ்த்துவோம் !

இசையமைப்பாளர் சாம் சிஎஸ்
வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துகள் விஜய் சார்...உங்களின் வருகையால் தமிழகம் வளரட்டும்...

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா
தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அவர்களும்—தெலுங்கு மண்ணில், தெலுங்கு மக்களின் மூத்த சகோதரரான என் தந்தை நந்தமூரி தாரக ராமராவ் அவர்களும்—ஒரு நடிகர் மனது வைத்தால், அவரால் வரலாற்றையே மாற்றி எழுத முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

அந்த வரலாற்று நிகழ்வை மீண்டும் நினைவுகூறும் வகையில் செயல்பட்ட என் சகோதரர் விஜய்க்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் அவர்மீது வைத்துள்ள நம்பிக்கைகளை நிறைவேற்றுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு, அவரது பயணம் சிறக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அதேபோல், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பெற்ற வெற்றிகளுக்காக, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கட்சிகளுக்கு என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மோடிஜி மற்றும் அமித் ஷாஜி ஆகியோரின் தலைமையின் கீழ்தான் ஒரு 'புதிய இந்தியாவை'க் கட்டமைப்பது சாத்தியம் என்று முழுமையாக நம்பி, அவர்களின் இந்த வெற்றிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் விஷ்ணு விஷால்
முதல் தேர்தலிலேயே பெரும் வெற்றியைச் சுவைத்துள்ள விஜய் அவர்களுக்கும், தவெக குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். மக்களின் அன்பை வெல்வது எளிதல்ல, ஆனால் அவர்கள் அதைச் சாதித்துக் காட்டியுள்ளனர். வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களாகிய உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துகள்.

மலையாள நடிகர் நிவின் பாலி
தமிழகத்தில் ஈட்டிய இந்த மகத்தான வெற்றிக்கு, விஜய் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மக்கள் உங்கள் தொலைநோக்குப் பார்வையின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; நீங்கள் பெருமையுடனும் உறுதியுடனும் வழி நடத்துவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பெரும் வாழ்த்துகள். இந்த வெற்றியின் மூலம், நீங்கள் சரித்திரம் படைத்துள்ளீர்கள்... வாழ்த்துகள் விஜய் சார். கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நீங்கள் நனவாக்குவீர்களாக.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
அன்பிற்குரிய விஜய் சார், தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் சாதித்திருப்பதை அடைவதற்கு, மிகுந்த மனவுறுதி தேவைப்படுகிறது. இது எனக்குப் பெருத்த பெருமையையும், உண்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

நடிகர் கவுண்டமணி
உழைப்பால் உயர்ந்து இருக்கிறார் நடிகர் விஜய். அவரின் வெற்றிக்கு மனதார வாழ்த்துகிறேன். அவர் மென்மேலும் வெற்றிகள் குவிக்க வேண்டும்

நடிகர் ராமராஜன்
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திரைத்துறையில் இருந்து வந்து குறுகிய காலத்தில் கட்சி தொடங்கி, முதன்முதலாக தேர்தலை சந்தித்து அதில் மக்களின் ஏகோபித்த பேராதரவைப் பெற்று தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் என் துறை சார்ந்த இனிய சகோதரர், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரித்தாக நல்லதொரு மக்களாட்சியை நிகழ்த்தி சாதி-மத வேறுபாடற்ற , லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தையும், அனைவருக்கும் பாதுகாப்பான அரசாகவும், கொலை, கொள்ளை, போதை கலாச்சாரம், போன்றவற்றை அறவே இல்லாமல் ஒழித்து, அனைத்து துறைகளிலும் பெண்கள் தைரியமாக சென்று வென்று வரக்கூடிய பாதுகாப்பு சூழலையும் ஏற்படுத்தி, படித்தோருக்கு உரிய வேலைவாய்ப்பினை உருவாக்கி எல்லா தரப்பு மக்களும் பயன் தரும் வாழும் மாநிலம் தமிழகம் என்ற நிலைக்கேற்ப சிறந்ததொரு புதிய யுக்தி ஆற்றலை கையிலெடுத்து புரட்சி கரமான ஆட்சி செய்திட இந்த அண்ணனின் அன்பான வாழ்த்துக்கள்!



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !