தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மறைவு : அஞ்சலி செலுத்த வருகிறாரா விஜய்?
ராஜஸ்தான் மாநிலம் சாலை விபத்தில் மரணம் அடைந்த சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி உடல் இன்று மதியம் 2 மணியளவில் சென்னைக்கு வருகிறது. முதலில் சென்னை தி.நகரில் உள்ள நடிகர் ஜீவா வீட்டில் அஞ்லிக்காக வைக்கப்படுகிறது. பின்னர், சென்னை மயிலாப்பூரில் அவர் வசித்த வீட்டில் பொதுமக்கள், திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. நாளை அவர் உடல் அடக்கும் நடக்கும் என தெரிகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், டி.ராஜேந்தர், பல இயக்குனர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 99 படங்களை தயாரித்த தயாரிப்பாளர் என்பதால் , அவரால் பலன் பெற்றவர்கள், அவர் படங்களில் பணியாற்றியவர்கள், நண்பர்கள் என பலரும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
நாளை முதல்வராக பதவியேற்க உள்ள விஜய்க்கும், ஆர்.பி.சவுத்ரிக்கும் நல்ல நட்பு உண்டு. சூப்பர்குட் நிறுவனம் தயாரித்த பூவேஉனக்காக படம்தான் விஜய்க்கு முதலில் பெரிய வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது. அந்த படத்தின் வெற்றி அவரை கமர்ஷியல் சினிமாவுக்கு மாற்றியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அவரை ஒரு முக்கியமான ஹீரோ ஆக்கியது. அதை தொடர்ந்து சூப்பர்குட் தயாரித்த துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், லல்டுடே, திருப்பாச்சி, ஜில்லா படங்களில் விஜய் நடித்தார். இந்த படங்களும் அவரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான கமர்ஷியல் படங்களாக மாறின.
சூப்பர்குட் நிறுவனம் தயாரிக்க இருந்த 100வது படத்தில் விஜயை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. அதிக சம்பளம், அவரின் அரசியல் என்ட்ரி, சினிமாவுக்கு முழுக்கு போன்ற காரணங்களால் அது நடக்கவில்லை. அதேசமயம் விஜயின் அரசியல் பயணத்துக்கு பாசிட்டிவ்வான கருத்துகளை சொல்லியிருந்தார் சவுத்ரி. இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் அல்லது திநகர் சென்று ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி செலுத்துவாரா? அல்லது பதவியேற்பு பணிகள் இருப்பதால் வேறு நபரை அனுப்புவாரா என கேள்வி எழுந்துள்ளது. அவர் தரப்பில் இன்று மாலை வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.