பிளாஷ்பேக்: பத்திரிகையாளர் படத்தின் நாயகனாக நடித்து, தோல்வியை சந்தித்த “ஸ்ரீ ராமானுஜர்”
பொதுவாகவே நம் தென்னிந்தியத் திரையுலகில் தயாரிக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்கள் ஆடல், பாடல், சாகச சண்டைக் காட்சிகள், காதல் களியாட்டங்கள் என அனைத்தும் நிறைந்த ஓர் ஒற்றை வரிக்கதையை உள்ளடக்கிய, வணிக ரீதியிலான திரைப்பட வகையைச் சார்ந்தவையாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகள், கதாசிரியர்கள் இந்த சினிமா ஊடகத்திற்குள் பிரவேசித்தபோதுதான், இந்த சினிமா உலகம் வேறு ஒரு பரிணாம வளர்ச்சியை நோக்கி பயணிக்கத் துவங்கியது.
வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே சினிமாவைக் கண்டுகளித்து வந்த ரசிகர்களின் ரசிப்புத் தன்மையும் அப்போதுதான் மேம்படத் தொடங்கியது. இந்த சமூகம் சார்ந்த பார்வை, அவலம் என அவர்களது சிந்தையில் உதித்த வித்துகளை எல்லாம் திரைவடிவில் காண்பிக்க முற்படும்போது, அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்காக அவர்கள் தெரிவு செய்து வைத்திருந்த திரைக்கலைஞர்கள் அமையாது போகும் பட்சத்தில், அந்த திரைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறத் தவறி தோல்வியை சந்தித்திருக்கின்றன. அந்த வகையில் 1938ம் ஆண்டிலேயே ஒரு பத்திரிகையாளர் சமூக நோக்கோடு ஒரு கலைப்படைப்பைத் தர விரும்பி, அதில் அவரே முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து, ஒரு தோல்விப் படமாக தந்த திரைப்படம்தான் “ஸ்ரீ ராமானுஜர்”.
சிறந்த பத்திரிகையாளர், தேச பக்தர் ந ராமரத்னம். 'பாரத தேவி' ராமரத்னம் என அழைக்கப்படும் இவர், தமிழ் சினிமாவின் சீர்கேடுகளை பத்திரிகைகளில் விமர்சித்து எழுதி வந்தவர். அப்போது இவருக்கும் இவரது நண்பர்களுக்கும் ஓர் விசித்திர எண்ணம் தோன்றியது. நாமே ஏன் ஒரு படத்தை உருவாக்கக் கூடாது? என்று. அப்படி அவர்கள் உருவாக்கி 1938ம் ஆண்டில் வெளியிட்ட ஒரு திரைப்படம்தான் “ஸ்ரீ ராமானுஜர்”. தேசபக்தரும், அறிஞருமான இத்திரைப்படத்தின் வசனகர்த்தாவான வ.ராமசாமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி படத்தின் பாடல்கள் அனைத்தையும் 'புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன் எழுதியிருந்தார்.
இத்திரைப்படத்தில் பத்திரிகையாளர் ந ராமரத்னம், மற்றுமொரு பத்திரிகையாளரும், தேசபக்தருமான சங்கு சுப்ரமணியம், சீதாலக்ஷ்மி ஆகியோர் நடித்திருந்தனர். மகாத்மா காந்தியின் தீண்டாமை எதிர்ப்புக் கொள்கையை வலியுறுத்தும் இத்திரைப்படத்தில் ஸ்ரீ ராமானுஜராக நடித்திருந்தவரும் பத்திரிகையாளர் ந ராமரத்னமே. படம் வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவ, தோல்வியை ஒப்புக் கொண்ட ந ராமரத்னம் பகிரங்கமாக சுயவிமர்சனம் ஒன்றையும் எழுதி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் அந்நாளில்.