நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி தொடர்ந்து கனமான கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது முதல் முறையாக ஹிந்தியில் 'ஏக் தின்' படம் மூலமாக அடியெடுத்து வைத்துள்ளார். அமீர்கானின் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை அமீர்கானின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமே தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் முழு காப்பியைப் பார்த்த போதுதான், இந்தத் கதாபாத்திரத்திற்குத் தான் செட்டாகவில்லை என்று உணர்ந்ததாகக் கூறியுள்ள சாய் பல்லவி, இன்னும் கொஞ்சம் ஆடம்பரமான அல்லது துடிப்பான தோற்றம் கொண்ட ஒரு புதிய நடிகை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அமீர் கானிடமே கூறினேன் என்றும் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆனால் உடன் நடித்த நாயகன் ஜுனைத் கான், சாய் பல்லவி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்; இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர்தான் பொருத்தமான தேர்வு. குறிப்பாக மது அருந்தும் காட்சியில் சாய் பல்லவி மிகவும் எதார்த்தமாக நடித்திருந்தார் என குறிப்பிட்டு ஜுனைத் கான் அவரைப் பாராட்டியுள்ளார். அந்த வகையில் தனது அபாரமான நடிப்பால் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியான தேர்வு என சாய் பல்லவி நிரூபித்துள்ளார் என்றும் ஜுனைத் கான் கூறியுள்ளார்.