ஜோதிகாவின் ஹிந்தி படம் 'சிஸ்டம்' : 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது
ஜோதிகா நடித்துள்ள ஹிந்தி திரைப்படம் சிஸ்டம். இதனை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கி உள்ளார். சோனாக்ஷி சின்ஹா, அஷுதோஷ் கோவாரிகர், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வரும் மே 22ம் தேதி பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது.
நேகா என்ற இளம் வழக்கறிஞராக சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார். தனது தந்தையான மூத்த வழக்கறிஞர் (அஸ்தோஷ் கோவாரிகர் ) முன்னிலையில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய சவாலில் அவர் ஈடுபடுகிறார். அதற்காக சரிகா என்ற நீதிமன்ற ஸ்டெனோகிராபரை (ஜோதிகா) அவர் தனது அணியில் இணைத்துக் கொள்கிறார். ஆனால் சரிகாவுக்கும் தனிப்பட்ட நோக்கங்கள் இருப்பது பின்னர் தெரிய வருகிறது. அதன்பிறகு நீதிமன்றத்தில் நடக்கும் கடுமையான மோதல்கள், சிக்கலான உறவுகள் மற்றும் உணர்ச்சி மிகுந்த தருணங்களை கொண்ட படமாக இது உருவாகி உள்ளது.
படம் குறித்து இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி கூறும்போது “பணக்காரர்களின் சத்தத்தில் ஏழைகளின் குரல் காணாமல் போய்விடுகிறது. அதிகாரம் உண்மையை விட வலிமையானதாக இருக்கும் ஒரு அமைப்பில், நீதி இன்னும் உயிருடன் இருக்கிறதா?” என்ற கேள்வியை இந்த படம் எழுப்பும்.
நான் சொல்லும் ஒவ்வொரு கதையும் ஒரு தைரியமான முயற்சிதான். என்னை சவாலுக்கு உள்ளாக்கும் கதைகளே என்னை ஒரு படைப்பாளியாக வளர்த்திருக்கின்றன. “சிஸ்டம்” திரைப்படமும் அதேபோல உண்மைத்தன்மையுடன் உருவான ஒரு படைப்பு. சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகா போன்ற வலிமையான நடிகைகள் இப்படத்தின் மையமாக இருப்பதால், இந்த படம் மக்களை வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.