பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை
சித்ராலயா கோபு நகைச்சுவை படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் ஆஸ்தான வசனகர்த்தாவாகவும் இருந்தார். என்றாலும் தொடர்ந்து நாடகமும் எழுதி, இயக்கிக் கொண்டிருந்தார். அப்படி அவர் எழுதிய நாடகம் 'திக்கு தெரியாத வீட்டில்'. இந்த நாடகம் நல்ல வரவேற்புடன் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அந்த நாடகம் சென்னையில் நடந்தபோது அதற்குத் தலைமையேற்றுப் பேசிய ஜெயலலிதா, “இந்த நாடகம் படமானால் அதில்வரும் துணிச்சலான கதாநாயகி வேடத்தில் நான் நடிக்கத் தயார்”என்று மேடையில் அறிவித்தார்.
நாடகத்தைப் பார்த்த பாபு மூவீஸ் 'வீட்டுக்கு வீடு' என்ற தலைப்பில் திரைப்படமாக எடுத்தனர். ஆனால் அறிவித்தபடி ஜெயலலிதாவால் நடிக்க முடியவில்லை. அப்போது எம்.ஜி.ஆர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். மாஸ் ஹீரோயினாகி விட்டதால் இந்த பேமிலி கதையில் அவர் நடித்தால் சரியாக வராது என்று அவரை தொடர்பு கொள்ளவே இலலை.
அதனால் லட்சுமி நடித்தார். நாடகத்தில் லட்சுமி கேரக்டரில் மனோரமா நடித்திருந்தார். முத்துராமன் நடித்த கதாபாத்திரத்தை ஜெய்சங்கரும், கோபி நடித்த கதாபாத்திரத்தை முத்துராமனும், மணிமாலா கதாபாத்திரத்தை 'வெண்ணிற ஆடை' நிர்மலாவும் நடித்தனர். வி.கே. ராமசாமி - நாகேஷ் இருவரும் அப்பா மகனாக காமெடி வேடத்தில் நடித்தனர். சிவி ராஜேந்திரன் இயக்கி இருந்தார்.