பிளாஷ்பேக்: பாடல் பதிவிற்குப் பின் நடனக் காட்சியை படமாக்கும் முறையை அறிமுகப்படுத்திய “அசோக்குமார்”
ஆரம்பகால தமிழ் திரைப்படங்களில், பாடல் காட்சிகளைப் படமாக்கும்போது, திரைக்கலைஞர்கள் நடித்துக் கொண்டே அவர்களே அந்தப் பாடலையும் பாடி வந்தனர். சிரமம் மிகுந்த இந்த நடைமுறையிலிருந்து மீள சினிமா உலகம் தொடர்ந்து போராடி வந்தது. அவ்வாறு பாதியில் நடிக்க முடியாமல் போன அஸ்வத்தாமா என்ற ஓர் நடிகைக்காக வி ஆர் தனம் என்ற பாடகியைப் பாட வைத்து, 1939ம் ஆண்டு எடுத்திருந்த ஒரு திரைப்படம்தான் “சாந்த சக்குபாய்”.
இந்த பழைய நடைமுறையிலிருந்த நம் தமிழ் திரையுலகம் ஒரு நவீன முறைக்கு மாறிய ஆண்டாக 1941ஐ குறிப்பிடலாம். பாடலை முன் கூட்டியே பதிவு செய்து, படப்பிடிப்பின் போது ஒலிபரப்பி, அதற்கு ஏற்ப நடனம் ஆடும் முறையைப் பின்பற்றத் தொடங்கியிருந்தனர் தமிழ் திரையுலகினர். இந்தப் புதுமையைச் செய்த முதல் தமிழ் திரைப்படமாக வெளிவந்ததுதான் இந்த “அசோக்குமார்”.
எம் கே தியாகராஜ பாகவதர் கதாநாயகனாகவும், டி வி குமுதினி கதநாயகியாகவும் நடித்திருந்த இத்திரைப்படத்தில், சித்தூர் வி நாகையா, பசுபலேடி பி கண்ணாம்பா, ரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் முன்கூட்டியே நடிகை பி கண்ணாம்பா பாடலைப் பாடிவிட்டு, அதனை ஒலிபரப்பும்போது ஆடிப் பாடுவது போல் வாயசைத்து நடனமாடி நடித்திருப்பார்.
மேலும் நடிகர் ரஞ்சனின் அறிமுகத் திரைப்படமான இத்திரைப்படத்தில் எம் ஜி ஆர் 'மகிந்திரன்'; என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறு வேடமேற்று நடித்திருப்பார். பாபநாசம் சிவனின் பாடல் வரிகளுக்கு ஆலத்தூர் வி சிவசுப்ரமணியம் இசையமைப்பில் எம் கே தியாகராஜ பாகவதர் பாடிய அத்தனைப் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. 17 செப்டம்பர் 1941ல் வெளிவந்த இத்திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.