திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்த நாகார்ஜுனா
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. அவர் திரையுலகிற்கு வந்து இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1986ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படமான 'விக்ரம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல தெலுங்குப் படங்களிலும் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
தமிழில் டப்பிங் ஆகி வெளியான அவரது படங்களான 'இதயத்தை திருடாதே, உதயம்' ஆகியவை நேரடி தமிழ்ப் படங்களை விடவும் வெற்றிகரமாக ஓடிய படங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'தோழா' படத்திலும், பின்னர் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்திலும் நடித்தார்.
திரையுலகில் நுழைந்து 40 வருடங்கள் ஆனதை முன்னிட்டு எக்ஸ் தளத்தில், “நான் இன்று பெற்றுக்கொண்ட அனைத்து ஆசீர்வாதங்களுக்கும், அன்புக்கும் மிக்க நன்றி. மே 23 !! நான் ஒருபோதும் மறக்க முடியாத தேதி !!
என் புகழ்பெற்ற தந்தை ANR அவர்களின் இறுதிப் படமான 'மனம்' படத்தை தயாரித்து வெளியிட்ட பெருமை பெற்ற தினம் இது. என் தந்தையுடனும், என் மகன்களுடனும் சேர்ந்து பணியாற்றிய பாக்கியம் பெற்ற படம்.
பல வருடங்களுக்கு முன்பு மே 23 தேதி எனக்கு என் முதல் படமான 'விக்ரம்'--ஐ வெளியிடும் வாய்ப்பை அளித்தது. உங்களை மகிழ்விக்கும் வாய்ப்பை, உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறும் வாய்ப்பைத் தந்தது.
இத்தனை வருடங்களாக என்னுடன் உறுதியாக நின்ற அனைத்து ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல மே 23 தேதிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.