நடிகர் சங்கத்தின் ஒற்றுமைக்காக மம்முட்டி, மோகன்லால் தலையிட வேண்டும் ; பிரித்விராஜ் அம்மா கோரிக்கை
கடந்த சில நாட்களாகவே மலையாள நடிகர் சங்கமான அம்மா மிகவும் பரபரப்பான செய்திகளில் அடிபட்டு வருகிறது. கடந்த வருடம் நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற்று நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முந்தைய சங்க உறுப்பினர்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதை தொடர்ந்து அப்போது தலைவராக இருந்த மோகன்லால் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
தற்போது பெண் ஒருவர் தலைமை பொறுப்பேற்றுள்ளதால் நிர்வாகம் சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக சங்கத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரும், தற்போது பணியிலிருந்து ராஜினாமா செய்திருக்கும் இணைச் செயலாளரான நடிகை அன்சிபா ஹாசனும் அடுத்தடுத்து நடிகர் சங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைத்திருப்பதனால் நடிகர் சங்கத்திற்குள் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாரன் சமீபத்தில் நடிகர் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நடிகர் சங்கம் தற்போது மிக மோசமான காலகட்டங்களில் ஒன்றை சந்தித்து வருகிறது. முன்பு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இப்போது அமைப்புக்குள் ஒற்றுமை இல்லாமல் வெளிப்படையாக பிரிவினை ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து நாங்கள் ஊடகங்கள் மூலமாகவே அறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சங்கத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு உறுப்பினரும் அறிய உரிமையுடையவர்கள். அலுவலக பணியாளர்கள் தொடர்பான பிரச்னையில் இருவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் ஒரு நபரை மட்டும் அனுப்பியதன் காரணம் என்ன? ஒரே புகாருக்கு இரண்டு விதமான அணுகுமுறை இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்னையில் மூத்த நடிகர்கள் மோகன்லாலும் மம்முட்டியும் தலையிட்டு சங்கத்தை மீண்டும் ஒற்றுமையுடன் செயல்பட செய்ய வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்தார்.