முதல் வார இறுதியில் 140 கோடி வசூலித்த 'திரிஷ்யம் 3'
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் 'திரிஷ்யம் 3'. இப்படம் 58 மணி நேரத்தில் 100 கோடி வசூலைப் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்கடுத்து வசூல் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, நேற்றுடன் முடிந்த முதல் வார இறுதியில் இப்படம் 140 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 63 கோடியும், வெளிநாடுகளில் 78 கோடியும் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். இந்திய வசூலை விட வெளிநாடுகளில் வசிக்கும் மலையாள சினிமா ரசிகர்கள் இந்தப் படத்திற்கு நல்ல ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள்.
கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் நன்றாக இருக்கிறது. முந்தைய இரண்டு பாகங்களை விட இந்த மூன்றாம் பாகத்தின் பட்ஜெட் அதிகம் என்கிறார்கள். அதனால், 200 கோடி வசூலைக் கடந்தால்தான் படத்திற்கு நிறைவான லாபம் கிடைக்கும் என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவலாக உள்ளது. அதை இந்த வார இறுதிக்குள் கடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.