உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் தாயார் மறைவு : முதல்வர் விஜய் இரங்கல்

அஜித் தாயார் மறைவு : முதல்வர் விஜய் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி, உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின், அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்
அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக., தலைவர் ஸ்டாலின்
அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் திருமதி மோகினி மணி, மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரை தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணை நிற்க விழைகிறேன். அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.

நடிகர், ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசன்
சகோதரர் அஜித்குமாரின் தாயார் திருமதி. மோகினி மணி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும், கார் பந்தய வீரருமான சகோதரர் அஜித்குமாரின் தாயார் திருமதி. மோகினி மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

பா.ஜ.,வின் அண்ணாமலை
நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமாரின் தாயார், திருமதி. மோகினி, வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!

மத்திய அமைச்சர் எல் முருகதன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இந்திய கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் தாயார் திருமதி. மோகினி மணி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தாயாரை இழந்து வாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். ஓம் சாந்தி..!

தமிழக பா.ஜ., தலைவர் நயினார்
இன்றைய தினம் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தாயார் திருமதி. மோகினி இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
நமது கண்ணெதிரே வாழ்கின்ற தெய்வத்தை இழந்து விட்டு ஆறுதல் கூற முடியாத நிலையில் இருக்கும் அஜித் குமாருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !