'மாம் 2' படப்பிடிப்பில் குஷி கபூரின் நடிப்பால் அதிருப்தியில் படக்குழுவினர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் தாயைப் போலவே நடிப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், தற்போது வெளியாகியுள்ள 'பெத்தி' படம் மூலம் ராம்சரண் என இளம் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பும் ஓரளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பதாக பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
அதே சமயம் ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூர் தற்போது 'மாம் 2' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது ஏற்கனவே ஸ்ரீதேவி நடித்து வெற்றி பெற்ற 'மாம்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் இயக்குனரும் எழுத்தாளருமான க்ரிஷ் கோஹ்லி, குஷி கபூரின் நடிப்பு திறமையின்மையால் பெரும் ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
படப்பிடிப்பில் அவரிடமிருந்து நடிப்பை வெளிக்கொண்டு வருவதற்கு படக்குழுவினர் கடுமையாக போராட வேண்டிய அளவுக்கு அதிக அளவுக்கு குஷி கபூர் ரீடேக்குகள் வாங்குவதாகவும் பல நேரங்களில் வசனங்களையே சரியாக நினைவில் வைத்து அவரால் பேச முடிவதில்லை என்றும் இதனால் உடன் நடிக்கும் சக நடிகர்கள் கூட அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு துவங்கி சில நாட்களே ஆகும் நிலையில் குஷி கபூரின் கதாபாத்திரத்தை சற்றே மாற்றி அமைத்து நடிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாதவாறு அந்த கதாபாத்திரத்தை எளிமையாக்க பக் குழு முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.