கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்கிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதேசமயம் வழக்கு முடியும் வரை ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சிக்க வேண்டாம் என கோர்ட் அறிவுறுத்தி இருந்தது.
ரவி மோகன் தனது தோழியான, பாடகி கெனிஷா உடன் நெருக்கம் காட்டி வந்தார். இந்த விவகாரத்தில் கெனிஷா மீது நெகட்டிவ் கருத்துகள் வர சமீபத்தில், ‛‛நான் ரவியை பிரிந்து செல்கிறேன், சென்னையை விட்டும் வெளியேறி விட்டேன்'' என கூறியிருந்தார்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரவி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். ‛‛சைபர் அட்டாக்கால் ஒரு நல்ல பெண்ணை ஊரை விட்டு அனுப்பி விட்டீர்கள்'' என கூறியதோடு ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரால் தான்பட்ட கஷ்டத்தையும் கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் தனது குடும்பம் கெட மூன்று எழுத்து நடிகை ஒருவர் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இது வைரலானது.
கோர்ட் உத்தரவை மீறி, ரவி மோகன் ஊடகங்களை சந்தித்ததாக, ஆர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்பு கோரி பொது அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாக ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரவி மோகன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ‛‛திருமண தகராறு பற்றிய கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்ததற்காகவும், தனது கருத்தால் மன வேதனை அடைந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இது குறித்த ஆவணமும் ரவி மோகன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.