'ஐட்டம் சாங்' என சொல்லாதீர்கள் : தமன்னா காட்டம்
சமீபத்தில் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் 'பெத்தி திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றாலும், படத்தில் நடித்த ஜான்வி கபூர் கதாபாத்திரத்தை ரொம்பவே கவர்ச்சியாகச் சித்தரித்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. அதற்காக அந்தப் படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனாவும் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில், நடிகைகள் ஒரு பாடலுக்கு மட்டும் தோன்றி சிறப்பு நடனம் ஆடுவதை 'ஐட்டம் பாடல்' என்று அழைப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று நடிகை தமன்னாவும் காட்டமாக ஒரு எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் தமன்னா கூறும்போது, திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களை 'ஐட்டம் சாங்' என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை. அந்த சொல் பெண்களுக்கு மரியாதைக்குரியது அல்ல. ஒரு பாடலுக்காக நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும்.. அதை 'ஐட்டம்' என்று அழைப்பது அந்தப் பெண்ணின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை அல்ல. இந்த அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். நடிகைகளை வெறும் கவர்ச்சி பொருளாகப் பார்க்காமல் அவர்களின் நடிப்பு திறமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.