'பன்முக ஆளுமை, திரைக்கதை மன்னர்'-க்கு பிரியாவிடை: அரசு மரியாதையுடன் பாக்யராஜ் உடல் தகனம்
நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு நேற்று முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், ரஜினி, கமல், தனுஷ், சிவகார்த்திகேயன், அம்பிகா, ராதா, மலையாள நடிகர்கள் மம்முட்டி, திலீப், சுரேஷ் கோபி, ஜெயராம், உள்ளிட்ட பல திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.
பாக்யராஜ் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடக்கும் என முதல்வர் விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து பாக்யராஜ் உடல் வெளியே கொண்டு வரப்பட்ட போது போலீசார் மரியாதை செய்தனர். பாக்யராஜின் உடலை வீட்டில் இருந்து வாகனம் வரை பார்த்திபன், சரத்குமார் ஆகியோர் தோளில் சுமந்து வந்தனர். காலை 9 மணியளவில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் வழிநெடுக ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை பெசன்ட் நகர் மின்மயானம் வந்த அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க, மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோயில் பகுதியில் பிறந்து, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தனது தனித்துவமான வசனங்களாலும், எளிய மனிதர்களின் எதார்த்தமான வாழ்வியல் நகைச்சுவைகளாலும் கட்டிப்போட்ட ஒரு மாபெரும் சகாப்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.