பதவி காலம் நீட்டிப்பு விவகாரம்: நடிகர் சங்கத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகளின் பதவி காலம் 3 ஆண்டுகள் என்கிற அடிப்படையில் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இவர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதை காரணம் காட்டி 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டுமென்றும், அதுவரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற் குழு ஆகியவை முடிவுகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் சங்கத்தின் உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நம்பிராஜனின் வழக்கு தவறானது. எல்லாம் சங்க விதிமுறைகளின்படியே நடந்துள்ளது, அவசர காலங்களில் பொதுக்குழு நிர்வாகிகளின் பதவி காலத்தை அதிகரிக்கலாம் எனவே நம்பிராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சங்கத்தின் உறுப்பினார் எஸ்.ஆர்.சேகர் என்பவர் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகர் சங்கத்திற்கு எதிராக நம்பிராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்து உத்தரவிட்டது.