பிளாஷ்பேக்: கசப்பான அனுபவங்களைத் தந்த இரண்டு திரைப்படங்களால் உதயமான ஏ வி எம்
பேசத் தொடங்கிய சினிமாக்களின் வருகைக்குப் பின், பெருவாரியான மக்களுக்கு பேரின்பத்தை அள்ளி வழங்கிய ஒரு பெருமைமிகு திரைக்கூடமாக பன்னெடுங்காலமாய், தலைமுறைகள் பல கடந்தும், சினிமா உலகில் சிம்மாசனமிட்டு அமர்ந்து, சிறப்பான கலைப்படைப்புகளை வழங்கிய தயாரிப்பு நிறுவனம்தான் ஏ வி எம் ஸ்டூடியோ. அந்த மூன்றெழுத்திற்கு சொந்தக்காரரான ஏ வி மெய்யப்ப செட்டியாரை சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை நிர்மாணிக்க தூண்டிய இரண்டு திரைப்படங்களைப் பற்றிய செய்திதான் இது.
1934ம் ஆண்டு “சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் முதல் தயாரிப்பாக, “அல்லி அர்ஜுனா” என்ற நாடகக் கதையை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் சினிமாவாக தயாரித்து வெளியிட்டார் ஏ வி மெய்யப்ப செட்டியார். அன்றைய நாளில் மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த சென்னையில் ஒலியுடன் கூடிய திரைப்படங்களை எடுப்பதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், இந்த “அல்லி அர்ஜுனா” திரைப்படத்தை கொல்கத்தாவிலுள்ள “நியூ தியேட்டர்ஸ் ஸ்டூடியோ” என்ற ஸ்டூடியோவில் படமாக்கியிருந்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார்.
சூரிய ஒளியில் படமாக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தை ஏ வி மெய்யப்ப செட்டியாரும் அவரது பங்குதாரர்களும் திரையிட்டுப் பார்த்தனர். கதாநாயகன் அர்ஜுனன் சூரிய ஒளியின் தாக்கத்தால் கண்களை மூடிக்கொண்டே கதாநாயகி அல்லியைத் தேடினார், பாடினார், காதலித்தார். இதனைத் தொடர்ந்து இதே ஆண்டில் “ரத்னாவளி” என்ற பெயரில் மேலும் ஒரு படத்தை தயாரித்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். இந்தப் படப்பிடிப்பின் போது புது கேமரா ஒன்றையும் ஏற்பாடு செய்து அதில் படப்பிடிப்பை நடத்தினர். கேமராவின் பிலிம் ஓடிய வேகத்திற்கும், ஒலிப்பதிவுக் கருவியின் 'சவுண்ட் பிலிம்' ஓடிய வேகத்திற்கும் வேறுபாடு இருக்க, படத்தை திரையிட்டுப் பார்க்கும் போதுதான் நடிகர்கள் வாயசைக்கும் போது வசனம் இல்லாமலும், வாய் மூடியிருக்கும்போது வசனம் ஒலித்ததையும் படக்குழுவினரால் உணர முடிந்தது.
அன்றைய நாளில் இந்த இரண்டு திரைப்படங்களும் தந்த கடினமான அனுபவங்கள்தான் பின்னாளில் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக பதிய வைத்தது ஏ வி மெய்யப்ப செட்டியாருக்கு. அதன் விளைவாக விருட்சம் கண்டு, பின் ஆலமரமாய் வளர்ந்து, பல அரிய கலைப்படைப்புகளை வழங்கி, இந்திய சினிமாவின் அடையாளமாகிப் போனதுதான் நம் பெருமைமிகு “ஏ வி எம் ஸ்டூடியோ”. கே எஸ் அனந்த நாராயண ஐயர் மற்றும் கே ஆர் காந்திமதிபாய் ஆகியோர் இணைந்து நடித்து, ஏ வி மெய்யப்ப செட்டியர் தயாரித்து, இயக்கியிருந்த “அல்லி அர்ஜுனா” திரைப்படமும், பிரபுல்லா கோஷ் இயக்கத்தில், எம் ஆர் கிருஷ்ணமூர்த்தி, பி எஸ் ரத்னாபாய், பி எஸ் சரஸ்வதி பாய் ஆகியோர் நடித்து, ஏ வி மெய்யப்ப செட்டியார் தயாரித்திருந்த “ரத்னாவளி” திரைப்படமும் 1935ம் ஆண்டு வெளிவந்து, பாக்ஸ் ஆபிஸில் தோல்வியையே சந்தித்தது.