லெனின் வெற்றிக்காக மகனுடன் திருப்பதி தரிசனம் செய்த நாகார்ஜுனா
தெலுங்கில் நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில், தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்கும் விதமாகப் போராடி வருகிறார். கடந்த 2023ல் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் தான் நடித்த 'ஏஜென்ட்' திரைப்படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால், அது தோல்விப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, தற்போது 'லெனின்' என்கிற படத்தில் நடித்துள்ளார் அகில். முரளி கிஷோர் அப்புரு என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து திருப்பதியில் உள்ள நேரு முனிசிபல் மைதானத்தில் மிக பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த நிகழ்வில் நாகார்ஜுனாவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மறுநாள் காலையில் அகில், நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ், தயாரிப்பாளர் நாகவம்சி உள்ளிட்ட படக்குழுவினருடன் நாகார்ஜுனாவும் அமலாவும் திருப்பதி கோவிலுக்குச் சென்று வெங்கடாஜலபதியை தரிசனம் செய்தனர்.
“'லெனின்' படத்தில் ஒரு புதிய அவதாரத்தில் அகில் கலக்குவார்; இது ஒரு ராயலசீமாவின் மகாபாரதம் போல இருக்கும்” என்று நாகார்ஜுனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.