இளையராஜா குடும்பத்தினர் உருவாக்கும் 'ராஜாஸ் பிளே லிஸ்ட்'
இசையமைப்பாளர் இளையராஜாவின் குடும்பத்தினர் பலர் திரையுலகில் வாரிசுகளாக வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இசை அமைப்பாளர்களாக, பாடகர்களாக வந்திருக்கிறார்கள். கங்கை அமரன், வெங்கட் பிரபு ஆகியோர் இயக்குனர்களாக ஆனார்கள்.
தற்போது இளையராஜா குடும்பத்திலிருந்து ஒருவர் சினிமாவுக்கு வருகிறார். இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரனின் மகன் ஜெயன் நடிகராக அறிமுகமாகிறார். படத்தை ரமணன் பால கங்காதரன் தயாரிக்கிறார்.
சோனா ஒலிக்கல் நாயகியாக நடிக்கிறார். வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி, பிரகதீஸ்வரன் பூபாலம், இந்துமதி, ரேஷ்மி, ரஞ்சித், ராம்குமார், மீனா, திலகவதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு வெங்கட் பிரபு கதையெழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொடியூசராகப் பொறுப்பேற்றுள்ளார். குடும்பஸ்தன் படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்திற்கு 'ராஜாஸ் பிளே லிஸ்ட்' என்று டைட்டில் வைத்துள்ளனர்.