உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 : தொடரும் குடும்பப் படங்களின் வெற்றி

2026 : தொடரும் குடும்பப் படங்களின் வெற்றி

2026ம் வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 120ஐ கடந்துவிட்டது. இத்தனை படங்களில் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற “தலைவர் தம்பி தலைமையில், தாய் கிழவி, கருப்பு, பிளாஸ்ட்” ஆகிய படங்கள் குடும்பப் பாங்கான படங்கள்தான். “வித் லவ், யூத்” ஆகிய படங்கள் காதல் படங்கள் என்று சொல்லப்பட்டாலும் அப்படங்களில் குடும்பப் பின்னணி என்பது முக்கிய அம்சமாக இடம் பெற்றிருந்தது. வெறுமனே காதல் படங்களாக அவை இல்லை.

இந்த வருடத்தில் இப்படி வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் குடும்பப் பாங்கான படங்களாகவே இருக்கிறது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டாப் நடிகர்கள் நடிக்கும் படங்களாக இருந்தால் அவை ஆக்ஷன் படங்களாகத்தான் இருக்கும். 'கருப்பு' படத்தில் கூட அப்பா, மகள் பாசம்தான் படத்தின் மையக் கருவாக இருந்தது. கூடவே, ஆன்மீக சக்தியையும் சேர்த்து படத்தை மாபெரும் வசூல் படமாக்கினார்கள்.

கடந்த வாரம் வெளியான 'கட்டா குஸ்தி 2' படமும் குடும்பப் படம்தான். தற்போது அந்தப் படமும் 22 கோடி வசூலித்து வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படமும் இந்த வருடத்தின் லாபகரமான படங்களின் பட்டியலில் சேரும் என்கிறார்கள்.

இளைஞர்களை நம்பி இளைஞர்களுக்காக எடுக்கப்படும் இளமையான படங்களில் கூட குடும்பம் என்பதை சேர்த்தால் வெற்றி என்பதை இந்த வருடம் வெளிவந்துள்ள படங்கள் நிரூபித்துள்ளன. குடும்பத்து ரசிகர்கள் வராமல் எந்தப் படமும் பெரிய வசூலைக் குவிக்க முடியாது என்பதே உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !