பிளாஷ்பேக்: எம்ஜிஆர் பாணியில் என்.டி.ராமராவ் நடித்த படம்
தெலுங்கில் புராண மற்றும் பக்தி படங்களில் நடித்த என்.டி.ராமராவிற்கு எம்ஜிஆர் மாதிரி படத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தது. குறிப்பாக எம்ஜிஆர் நடித்த 'புதுமைப் பித்தன்' போன்ற படத்தை விரும்பினார். இதற்காக வாஹினி கதை இலாகா உருவாக்கிய படம்தான் 'ராஜமகுடம்'. என்டிஆருடன், ராஜசுலோச்சனா, கண்ணாம்பா, கும்மாடி, பத்மநாபம், ராஜநலா நடித்தனர். படம் தெலுங்கு, தமிழில் தயாரானதால் தமிழ் பதிப்பிற்கு வி.ஆர். ராஜகோபாலன், எஸ்.வி. சகஸ்ரநாமம் மற்றும் பாலாஜி ஆகியோர் நடித்தனர். தஞ்சை ராமய்யா தாஸ் பாடல்களை எழுதினார்.
இந்த படத்தை விஜயவாஹினி ஸ்டூடியோவின் ஆஸ்தான இயக்குனர் பி.என்.ரெட்டி இயக்கினார். இவர் விஜயவாஹினி நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்தார். நிறைய சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு நாட்டுப்புற ராஜா ராணி கதை.
காந்தார நாட்டின் படைத்தளபதியான பிரசண்டா, தனது மகன் பஜ்ரங்காவை அரியணையில் அமர்த்துவதற்காக, மன்னரான தனது சகோதரரை கொல்கிறார். மேலும் இளவரசன் பிரதாப்பை (என்.டி.ஆர்.) கொல்லவும் முயன்று தோல்வியடைகிறார். பிரதாப், ஒரு கிளர்ச்சியாளர் குழுவைச் சேர்ந்த பிரமிளாவைச் (ராஜசுலோச்சனா) சந்திக்கிறார். அவருடன் இணைந்து பிரசண்டாவை வீழ்த்தி இழந்த ஆட்சியை எப்படி கைப்பற்றுகிறார் என்பதான் படத்தின் கதை.
இந்த படத்தில் என்டிஆர் நிறைய சண்டை காட்சிகளில் நடித்தார். ஆனால் லாஜிக் இல்லாத சண்டை காட்சிகளில் இயக்குனர் பி.என்.ரெட்டிக்கு விருப்பம் இல்லை. ரசிகர்களிடைய சண்டை காட்சிகள் வன்முறை உணர்வை தூண்டும் என்பது அவர் கருத்து. இதனால் சண்டை காட்சிகளின் போது இயக்குனரை வெளியேற்றி விட்டு சண்டை இயக்குனருடன் இணைந்து சண்டை காட்சிகளை தானே இயக்கினார் என்டிஆர்.