உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி காலமானார்

பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி காலமானார்

தென் இந்தியாவின் நைட்டிங்கேள் என வர்ணிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி (88), வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் மைசூரில் காலமானார். கடந்த சில தினங்களாகவே உடலம் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் ரிபேலே பகுதியில் 1938 ம் ஆண்டு ஏப்.,23ம் தேதி பிறந்தார் ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஒடியா, துலு, பஞ்சாபி, வங்காளம் , கொங்கணி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரம்பாடல்களை பாடி உள்ளார்.

தமிழில் 1957ம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற படத்தில் அறிமுகமானார். 4 முறை தேசிய விருது, பல்வேறு மாநிலங்களின் விருது என ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்.

இனிமையான குரலால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ஜானகி. இந்திய இசைத்துறையில் அவர் நிகழ்த்திய பங்களிப்பு அளவிட முடியாதது. அவரது மறைவு நிச்சயம் இசைத் துறைக்கு பேரிழப்பு தான்.

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் என அடுத்தடுத்து காலமாகினர். நேற்றுமுன்தினம் ஒளிப்பதிவாளர், இயக்குனர் செழியன் காலமானார். இப்போது ஜானகி காலமாகி உள்ளார். இது திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு அன்று இறுதிச்சடங்கு
மறைந்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி உடல் நாளை(ஜூலை 12) காலை 7:30 மணி முதல் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை கனியனஹூந்தி தோட்டத்தில் இறுதிச் சடங்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !