உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரு பில்லியன் டாலர் வசூலை கடந்து 'மைக்கேல்' சாதனை: பயோபிக் படங்களில் 'டாப்'

ஒரு பில்லியன் டாலர் வசூலை கடந்து 'மைக்கேல்' சாதனை: பயோபிக் படங்களில் 'டாப்'


உலகம் முழுவதும் கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்டிருந்த மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் படமான 'மைக்கேல்' கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நாட்கள் செல்ல செல்ல வரவேற்பு அதிகரித்தது. இதனால் வசூலும் கூடியது.

பாப் உலகின் சக்ரவர்த்தி மைக்கேல் ஜாக்சன் தனது சகோதரர்களையும் உள்ளடக்கிய 'ஜாக்சன் 5' இசைக்குழு மூலம் எப்படி 10 வயதிலேயே புகழ்பெற்று தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் என்பதே படத்தின் மையக்கரு. வழக்கமான வாழ்க்கை வரலாற்றுக் கதையாக இல்லாமல், மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது.

மைக்கேல் ஜாக்சனாக அவரது சகோதரரின் மகன் ஜபார் ஜாக்சன் நடித்துள்ளார். சிறுவயது மைக்கேலாக ஜூலியானா வால்டி நடித்துள்ளார். மைக்கேல் ஜாக்சனின் உலகளாவிய ஹிட் பாடல்கள் மட்டுமின்றி மைக்கேல் ஜாக்சனின் சில ஆரம்பக்கட்ட பாடல்களும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது இந்த தலைமுறையினருக்கு சர்ப்ரைஸாக அமைந்திருந்தது.

ஜான் லோகன் திரைக்கதையில், அன்டோனியா புகுவா இயக்கியிருந்த இப்படம் உலகம் முழுவதும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9533 கோடி ரூபாய். இதுவரை வெளிவந்த பயோபிக் படங்களிலேயே இதுதான் அதிக வசூலை கொடுத்த படம் என்ற சாதனையை படைத்தது.

2018ம் ஆண்டில் வெளியான ப்ரெடி மெர்குரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'போஹிமியன் ராப்சோடி' திரைப்படம் 911 மில்லியன் டாலர் வசூலுடன் முதலிடத்தில் இருந்தது. அதனை கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம் 977 மில்லியன் டாலர் வசூலித்து முறியடித்தது. தற்போது அதைவிட அதிகமாக வசூலித்துள்ளது 'மைக்கேல்' திரைப்படம். இதன்மூலம் பயோபிக் படங்களிலேயே ஒரு பில்லியன் டாலர் வசூலித்த படமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !