ராஜமவுலி, பஹத் பாசில் கூட்டணியில் உருவாகும் குழந்தைகள் சினிமா
குழந்தைகளுக்கான சினிமா குறைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. முன்பெல்லாம் ஆண்டு நான்கைந்து குழந்தைகள் சினிமா வரும். ஆனால் இப்போது குழந்தைகள் செல்போனில் மூழ்கி கிடப்பதால் குழந்தைகள் சினிமாவிற்கு பெரிய வரவேற்பு இல்லை என்ற கருத்தும் இருக்கிறது. இதை போக்கும் வகையில் எஸ்.எஸ்.ராஜமவுலி தயாரிக்க, பஹத் பாசில் நடிக்கும் குழந்தைகள் சினிமா ஒன்று பான் இந்திய சினிமாவாக உருவாகிறது.
'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' என்பது படத்தின் டைட்டில். 'பாகுபலி' படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸ் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ளார். காள பைரவா இசை அமைக்கிறார், எதிர்வரும் செப்டம்பர் 11 ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.
கதைப்படி பஹத் பாசில் ஒரு மேஜிக் நிபுணர். அவருக்கு ஒரு சிறுமியை மகிழ்விக்க வேண்டிய பொறுப்பு தரப்படுகிறது. அவர் பல மேஜிக் செய்து அந்த சிறுமியை மகிழ்விக்கிறார். அதில் ஒரு மேஜிக்கில் பிரச்சினை ஏற்பட்டு, அதற்குள் அந்த சிறுமி சிக்கிக் கொள்கிறார். பெரிய போராட்த்திற்கு பிறகு அந்த சிறுமியை அவர் எப்படி மீட்டுக் கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை. காமெடி, பேண்டசி, சென்டிமெண்ட் கலந்த படமாக உருவாகி வருகிறது.