ராகினி 3 படப்பிடிப்பு தொடக்கம் : முதல் போட்டோவை பகிர்ந்த தமன்னா
ஹிந்தியில், திகில் மற்றும் த்ரில்லர் படமான ராகினியின் மூன்றாவது பாகம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. புதிய நடிகர்கள் மற்றும் புதிய தொழில் நுட்பக் குழுவுடன் இந்த படம் ஆரம்பமாகியுள்ளது. இப்படத்தின் கதைக்களம் குறித்து தயாரிப்பாளர்கள் ரகசியம் காத்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகினி -3 படத்தின் படப்பிடிப்பில் தற்போது தமன்னா இணைந்துள்ளார். படப்பிடிப்பின் முதல் நாளில் டே -01 என எழுதப்பட்ட கிளாப் போர்டைப் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் தமன்னாவுடன் சேர்ந்து ஆயுஷ் சர்மா, ஜூனைத் கான், நர்கிஸ் பக்ரி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். ராகினி படத்தின் முந்தைய பாகங்களை விட வித்தியாசமாக, ராகினி 3 படத்தை ஷஷாங்கா கோஷ் இயக்குகிறார். வழக்கமான சூப்பர் நேச்சுரல் ஹாரர் மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்களுடன் முற்றிலும் புதிய கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது.
2011ல் ராகினி எம்.எம்.எஸ் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2014-ல் சன்னி லியோன் நடிப்பில் வெளியான ராகினி எம்.எம்.எஸ் 2 படமும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதன்முறையாக தமன்னா இந்த பாலிவுட் ஹாரர் படத்தில் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பாலிவுட் தாண்டி தென்னிந்தியாவிலும் அதிகரித்துள்ளது.