உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 7 லட்சத்தில் உருவான ரேகா படம்

பிளாஷ்பேக்: 7 லட்சத்தில் உருவான ரேகா படம்


பிரபல கதாசிரியரான அன்னக்கிளி ஆர்.செல்வராஜ் சில படங்களை இயக்கியும் உள்ளார். அதில் முக்கியமான படம் 'சிகப்பு நிறத்தில் சின்னப்பூ'. பிரமாண்ட படங்களை எடுத்த டி.ராமநாயுடு தயாரித்தார். 7 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம் இது. ரேகா கதாநாயகி. கண்டசாலாவின் மகன் ரத்னகுமார் நாயகன். வில்லனாக நடித்தவர், நடிகர் விக்ரமின் தந்தை வினோத்.

கணவனைக் கொன்றதாகப் பழி சுமத்தி ரேகாவைச் சிறையில் அடைத்து விடுகிறார்கள். ரேகாவுக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகனுக்கு பத்து வயது. அவன் தங்கைக்கு ஆறு வயது. அம்மா அடைபட்டிருக்கும் சிறையின் சுவர் அருகே மகன், 'அம்மா அம்மா' என்று அழுவான். ஒரு முறை தந்தையை கொன்றவர்களை பற்றி அம்மா அவனிடம் சொல்லிவிட அவன் கொன்றவர்களை பழிவாங்கிவிட்டு சிறுவர் சீர்திருத்த சிறைக்கு செல்வான். குற்றமற்றவள் என்று விடுதலையான ரேகா மகன் இருக்கும் சிறை சுவர் அருகே நின்று அழுவாள் இதுதான் படத்தின் கதை.

புழல் சிறை கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது முழு படப்பிடிப்பும் அங்குதான் நடந்தது. ரேகா 25 நாட்கள் நேராக சிறைக்கு சென்று நடித்து கொடுத்து விட்டு திருப்பினார். படத்திற்கு குறைவான சம்பளமே வாங்கினார். படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டனர். முதல் நாள் படம் பார்த்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ரசித்தனர். மக்கள் படம் பார்த்துவிட்டு, 'அந்தச் சிறுவனை எப்படியாவது வெளியே கொண்டு வாருங்கள்' என வழக்கு நடத்துவதற்குப் பணம் அனுப்பியதெல்லாம் உண்மை சம்பவங்கள் ஆனாலும் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !