மம்முட்டி படத்தின் அவிழ்க்கப்படாத மர்மம் ; 34 வருடங்களுக்கு பிறகு வெளியிட்ட இயக்குனர்
மலையாள திரை உலகில் கமர்சியல் இயக்குனர்களில் பிரபலமானவர் இயக்குனர் ஜோஷி. இவர் மம்முட்டி, மோகன்லால் உடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் 1992ல் ஜோஷி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் 'கவுரவர்'. இந்தப் படத்தின் கதையை மறைந்த இயக்குனர் லோகிததாஸ் எழுதியிருந்தார். சிறைவாசம் முடிந்து திரும்பும் மம்முட்டி, நீண்ட காலமாக பிரிந்து இருந்த தனது மகளை தேடி கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை.
கதைப்படி மம்முட்டியின் மகள் வேறு ஒரு நபர் வீட்டில் அவரது இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்த்து வளர்ந்து வருவார். ஆனால் மம்முட்டி அந்த நபரை கண்டுபிடிக்கும் சமயத்தில், மம்முட்டியின் மகள் யார் என்கிற உண்மையை அவரிடம் கூறாமல் இறந்து விடுவார். மம்மூட்டியும் இந்த மூவரையுமே என்னுடைய மகளாகவே நினைத்துக் கொண்டு வளர்க்கிறேன் என்று சொல்வதாக படம் முடியும். இதில் என்ன ஆச்சரியம் என்றால், படத்தில் மம்முட்டியின் உண்மையான மகள் யார் என்கிற உண்மை கடைசிவரை ரசிகர்களுக்கு சொல்லப்படவே இல்லை.. அது மட்டுமல்ல, படத்தில் நடித்த மம்முட்டிக்கு கூட தனது மகள் கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் யார் என்கிற உண்மை இப்போது வரை தெரியாதாம்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை கூறியுள்ள இயக்குனர் ஜோஷி, ஆனால் ரசிகர்களுக்கு க்ளூ கொடுப்பது போல மற்ற இரண்டு பெண்களின் முகமும் நீள் வட்ட வடிவில் இருக்கும், ஆனால் மம்முட்டியின் மகளாக நடித்தவரின் முகம் மட்டும் வட்ட வடிவில் இருக்கும். இதை பார்வையாளர்கள் தங்களது நுண்ணறிவால் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அது பற்றி வெளிப்படையாக கூறாமல் வைத்திருந்தோம். ஆனால், இப்போதுவரை யாராலும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.