பிளாஷ்பேக்: கேரக்டருக்காக உடல் மெலிந்த முதல் நடிகை
சிவாஜி கணேசன் நடிப்பில் பீம்சிங் இயக்கிய 'பாலும் பழமும்' 1961ம் ஆண்டு வெளியானது. சென்னையில் 20 வாரங்களை கடந்து ஓடி வசூலை குவித்தது. இந்தப் படத்தில் புற்று நோய்க்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் இருக்கும் மருத்துவர் சிவாஜி கணேசன். அவருக்கு உதவியாக இருக்கும் நர்ஸ் சரோஜாதேவி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். ஒரு கட்டத்தில் சரோஜா தேவிக்கே காச நோய் வர, தனது நோய் தனது கணவனின் ஆய்வுக்கு தடையாக இருந்து விடக்கூடாது என்று அவரை விட்டு பிரிந்து சென்று விடுவார். சரோஜாதேவி ரயிலில் அடிபட்டு இறந்ததாக செய்தி வரும். சிவாஜியும் அதனை நம்புவார். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் சவுகார் ஜானகியை திருமணம் செய்து கொள்வார்.
சில வருடங்களுக்கு பிறகு விபத்து ஒன்றில் சிக்கும் சிவாஜிக்கு கண் பார்வை பறிபோய்விடும். அவரை கவனித்துக் கொள்ளும் நர்சாக வருகிறவர் காசநோயில் இருந்து மீண்ட சரோஜாதேவி. தன்னை யார் என்று வெளிப்படுத்தாமலேயே அவருக்கு பணிவிடை செய்வார். தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
டிபி நோயாளியாக மெலிந்த தோற்றம் மற்றும் இளமையான தோற்றம், சற்று முதிர்ந்த தோற்றம் என மூன்று விதமான தோற்றங்களில் நடித்திருப்பார் சரோஜாதேவி. இதில் டிபி நோயாளியாக நடிப்பதற்கு உடல் மெலிய வேண்டும். இதற்காக பல நாட்கள் வெறும் பழரசத்தை மட்டும் அருந்தி உடல் இளைத்து நடித்தார். அப்படி வலுக்கட்டாயமாக உடல் மெலிந்ததால் நிஜமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதையும் அப்படியே படமாக்கிக் கொண்டார் பீம் சிங். பிறகு உடல் நலம் தேறிய பிறகு மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
தான் நடிக்கும் கேக்டருக்காக உடலை ஏற்றி இறக்குவது இப்போது சகஜமான ஒன்று. ஆனால் அந்தக் காலத்தில் நடிகர்களுக்கு உடல்நலம்தான் முக்கியம் என்பதால் அவர்கள் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். அந்த வகையில் கேரக்டர்களுக்கு செயற்கையாக உடலை மாற்றிய முதல் நடிகை சரோஜாதேவி என்கிறார்கள். 'பாலும் பழமும்' படத்தில் என்னை விட சிறப்பாக நடித்தது சரோஜாதான் என்று சிவாஜி பல நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.