சினிமாவில் ஆளுமையாக இருந்து அநாதை இல்லத்தில் அடைக்கலமான மோகன் சர்மா
'நம்ம கிராமம்' என்ற புகழ்பெற்ற படத்தை இயக்கியவர் மோகன் சர்மா. பல விருதுகளை குவித்த படம் இது. புனேவிலுள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடிப்பு பயின்ற முதல் தென்னிந்தியர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்கள் நடித்ததோடு திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என சினிமாவின் பல்வேறு தளங்களில் இயங்கியவர். அக்கரை பச்சை, ஏணிப்படிகள், தூண்டில் மீன், கண்ணெதிரே தோன்றினாள், பிரண்ட்ஸ், பார்த்திபன் கனவு, பிரியமான தோழி, சச்சின், போன்றவை தமிழில் நடித்த முக்கியமான படங்கள். திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தவர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த மோகன் சர்மா தற்போது தன்னுடைய 80 வது வயதில் சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தில் தற்போது இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
சினிமாவுல பரபரப்பா இயங்கிட்டிருந்த காலத்துல சென்னையில போயஸ் கார்டன் பகுதியில எனக்கு வீடு இருந்தது. நான் தயாரித்து இயக்கிய 'நம்ம கிராமம்' பல விருதுகள் கிடைத்தது.
தமிழ்நாடு அரசு விருது மட்டுமல்லாமல் கேரள அரசின் விருதும் அந்தப் படத்துக்கு கிடைச்சது. அடுத்து சீரியல் பக்கம் வந்தேன். அங்கேயும் நிறைய சீரியல் பண்ணினேன். சினிமா, சீரியல் ரெண்டும் என்னை பிசியா வச்சிருந்தாலும் குடும்ப வாழ்க்கை எனக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரல. வெளியில சொல்ல முடியாத துயரத்தையெல்லாம் சந்திச்சேன். ஒரு கட்டத்துல போயஸ் கார்டன் வீட்டை விற்றேன். உடலும் மனசும் ரொம்பவே சோர்ந்து போயிடுச்சு. கையில காசு இல்லை. நோய் நொடினு வந்தா பக்கத்துல இருந்து பார்க்க ஆள் இல்லை. வாழ்க்கையே வெறுத்துப் போயிடுச்சு.
இந்தச் சூழல்லதான் ரோட்டரி கிளப் நண்பர்கள் இந்த முதியோர் இல்லத்தைக் காட்டி இங்க வந்து சேர்த்து விட்டாங்க. இந்த இல்லத்தில் இப்போதைக்கு தங்க இடமும் சாப்பாடும் இலவசமா தந்திடுறாங்க. ஆனால் வயோதிக பிரச்னைகளால் எடுக்கிற மருந்து மாத்திரைகள் வாங்க என்கிட்ட பணம் இல்லை.
நான் இங்க இப்படி இருக்கேன்னு ரஜினி சாருக்குச் சொல்லியிருக்காங்க. சில தினங்களுக்கு முன் அவர்கிட்ட இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் வந்தது. அதை வச்சு சமாளிச்சிட்டிருக்கேன். பிலிம் சேம்பர்ல நான் பொறுப்புல இருந்தபோது வயதான காலத்துல இந்த மாதிரி யாராவது நோய் நொடின்னு கஷ்டப்பட்டா அஞ்சு லட்ச ரூபாய் வழங்கலாம்னு ஒரு தீர்மானம் போட்டிருந்தேன். அந்த உதவியை இப்போது நானே கேட்கிறேன் தர மறுக்கிறார்கள். செத்தால் தருவதாக சொல்கிறார்கள். செத்த பிறகு யாரிடம் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை.
'நம்ம கிராமம்' படத்திற்கு அரசு மானிய தொகை கிடைக்கவில்லை. அதுவும் கிடைத்து படத்தோட உரிமத்தை யாராவது வாங்கி அதற்குரிய பணத்தை தந்தால் மீதி காலத்தை சிரமமின்றி கழித்து விடுவேன். என்று உருக்கமாக கூறியிருக்கிறார் மோசன் சர்மா.