'வாரணாசி' படம் ஏன் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்படுகிறது? ராஜமவுலி விளக்கம்!
இயக்குநர் ராஜமவுலியின் 'வாரணாசி' படம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுற்றும் கதைக் களத்தைக் கொண்ட இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திற்காகவே படமாக்கப்பட்டு வருகிறது என்பது ரசிகர்கள் அறிந்த ஒன்றுதான். இருப்பினும், இந்த உயர்தர பெரிய திரை வடிவத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான காரணத்தை ராஜமவுலி இதுவரை விளக்காமல் இருந்தார்.
சமீபத்தில் ஒரு பிரெஞ்சு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இந்த முடிவிற்கான காரணத்தை ராஜமவுலி வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், ''படத்தின் பிரமாண்டமான அளவீடுகளுக்கு திரையரங்கில் பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான மற்றும் மூழ்கடிக்கும் திரை அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பம் தேவைப்பட்டது.
வாரணாசி படத்தில் சுமார் 300 அடி உயரமுள்ள அண்டார்டிக் பனிப்பாறைகளும், ராமாயணத்தில் வரும் பிரமாண்டமான வானர சேனைப் படைகளும் இடம்பெறுகின்றன. ஐமேக்சின் அகலமான திரையானது இக்காட்சிகளின் பிரமாண்டத்தையும் காட்சி வனப்பையும் பார்வையாளர்கள் முழுமையாக அனுபவிக்க உதவும் என்று விளக்கியுள்ளார்.
வாரணாசி கதையைப் பற்றிய விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்திருந்தாலும், ராஜமவுலியின் இந்த அறிவிப்பு படத்தின் பிரமாண்டமான காட்சிக் கற்பனையை நமக்கு உணர்த்துகிறது. படத்தின் மிக முக்கிய அதிரடி காட்சிகள் ஏற்கனவே படமாக்கி முடிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா , பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் வாரணாசி படம் 2027, ஏப்ரல் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.