இனி கிளாமராக நடிக்க மாட்டேன் : ராய் லட்சுமி
ஆர்.வி. உதயகுமார் இயக்கிய 'கற்க கசடற' படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. கர்நாடக மாநிலம் பெல்காமை சேர்ந்த இவர் அதன் பிறகு தர்மபுரி', 'தாம் தூம்', 'காஞ்சனா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக நான்கு வருடங்களுக்கு முன்பு 'சிண்ட்ரெல்லா' என்ற படத்தில் நடித்தார்.
முதுகுப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக சினிமாவிலிருந்து விலகி இரண்டு ஆண்டுகள் ஓய்வில் இருந்த ராய் லட்சுமி தற்போது மீண்டும் நடிக்க தீவிரம் காட்டி வருகிறார். அதற்கான முயற்சியிலும் இறங்கி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஆரம்ப காலத்தில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் நான் பெரிய அளவில் கவனம் செலுத்தியதில்லை. எது சரியான படம், எது தவறான படம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் தோல்விப் படங்களையும் பார்த்திருக்கிறேன், வெற்றிப் படங்களையும் பார்த்திருக்கிறேன்.
மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டியுடன் நடித்திருக்கிறேன். அங்கு ரசிகர்கள் என்னை 'கேர்ள் நெக்ஸ்ட் டோர்' எனப் பார்க்கிறார்கள். ஆனால் தமிழில் நான் சேலை அணிந்து நடித்தாலும் கிளாமராகவே பார்க்கிறார்கள். இந்த கிளாமர் பிம்பம் ஏன் படிந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
திரையுலகில் ஒரு குறிப்பிட்ட முறையில் அறிமுகமாகி, அந்த அடையாளம் மக்களுக்குப் பிடித்துவிட்டால், மீண்டும் மீண்டும் நம்மிடம் இருந்து அதையேதான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நான் போதுமான அளவிற்கு கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். இனிமேல் கிளாமர் இல்லாத, யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். மேக்கப் கூட இல்லாமல் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை என்று கூறியுள்ளார் ராய் லட்சுமி.