உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஆர்.ஆர்.ஆர்' பட பாடகர் மீது இளம்பெண் புகாரின் பேரில் வழக்குப்பதிவு

'ஆர்.ஆர்.ஆர்' பட பாடகர் மீது இளம்பெண் புகாரின் பேரில் வழக்குப்பதிவு


கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இசை மற்றும் பாடல்கள் பிரிவில் ஆஸ்கர் விருதுகளையும் பெற்றது. அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்தப் பாடலை பாடிய ராகுல் சிப்லிகஞ்ச் மீது தற்போது விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது : விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ராகுல் சிப்லிகஞ்சின் உறவினர் ராகுல் ரெட்டி என்பவருடன் காதலில் ஈடுபட்டிருந்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உறவு கொண்டுவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொள்ள அந்த நபர் மறுப்பதாகவும், மீறினால் தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் அவர் மிரட்டி வருகிறார் என்றும் அந்தப் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டி 'ராகுல் ரெட்டிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பு இல்லை' என வலுக்கட்டாயமாக ஒரு வீடியோ பதிவு செய்ய வைத்ததில் பாடகர் ராகுல் சிப்லிகஞ்சுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புகார் குறித்துக் கூறியுள்ள ராகுல் சிப்லிகஞ்ச், நான் எந்தப் பெண்ணையும் ஏமாற்றவில்லை. எனது குடும்பத்தினரை சிக்க வைக்கும் நோக்கில் பரப்பப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. நான் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. இது குறித்து உண்மை என்ன என்பதை விரைவில் விளக்கமாக ஒரு வீடியோவாக வெளியிட இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !