உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: “சொல்லாமலே” திரைப்படமும், சொல்லி அடித்த திரைக்கஞைர்களும்

பிளாஷ்பேக்: “சொல்லாமலே” திரைப்படமும், சொல்லி அடித்த திரைக்கஞைர்களும்


1990களின் காலகட்டம் என்பது தமிழ் திரையுலகிற்கு ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிய காலகட்டமாகவே அமைந்திருந்தது. புதுவிதமான சிந்தனையோடு, புதிய கதைக் களங்களோடு புதுமுக இயக்குனர்கள் பலர் அறிமுகமாகி, சிறந்த கலைப் படைப்புகள் பலவற்றை கலையுலகிற்கு வழங்கிய ஒரு பொன்னான காலகட்டமாக பார்க்கப்பட்டு வந்ததுதான் இந்த 90களின் காலகட்டம். ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், அகத்தியன், சேரன், எஸ் ஜே சூர்யா, பாலா என வரிசைகட்டி வந்த இயக்குனர்களின் பட்டியலில் குறிப்பிடும்படியான ஒரு இயக்குநராக பார்க்கப்படுபவர்தான் இயக்குநர் சசி. 1998ஆம் ஆண்டு வெளிவந்த “சொல்லாமலே” என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இவர்.

இந்தக் காலகட்டங்களில் எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்த ஒரு தலைசிறந்த தயாரிப்பு நிறுவனம்தான் “சூப்பர் குட் பிலிம்ஸ்”. அதன் அதிபர் மறைந்த ஆர் பி சவுத்ரியிடம் தனது முதல் படைப்பான “சொல்லாமலே” திரைப்படத்தின் கதையைச் சொல்லி, அவரை திருப்தி படுத்தியிருந்த இயக்குநர் சசி, அப்போது வளர்ந்து வந்து கொண்டிருந்த இளம் நாயகனான நடிகர் பிரபுதேவாவை கதையின் நாயகனாக நடிக்க வைக்கலாம் என்ற தனது விருப்பத்தை தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியிடம் கூற, அதற்கு தனது முந்தைய திரைப்படமான “சுந்தர புருஷன்” திரைப்படத்தில் தன்னால் நாயகனாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகர் லிவிங்ஸ்டனையே இத்திரைப்படத்திலும் நாயகனாக நடிக்க வைக்கலாம் என்ற தனது யோசனையை இயக்குநர் சசியிடம் கூறியிருக்கின்றார் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி. நடிகர் பிரபுதேவவை மனதில் வைத்து “சொல்லாமலே” படத்தின் கதையை வடிவமைத்திருந்த இயக்குநர் சசி, பின் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் விருப்பத்திற்கு தலையசைத்து, தனது சம்மத்தையும் தெரிவித்து, படப்பிடிப்பிற்கான வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கின்றார்.

தனக்கு போதிய அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மை கொண்ட, ஓவியம் வரையும் ஆற்றல் படைத்த, நேர்மையான கிராமத்து இளைஞன் நடராஜ், சென்னையில் பேனர்கள் எழுதும் பணி செய்து வருகின்றான். அவனை வாய்பேச இயலாதவன் என நினைத்து, அவனுடைய கலைத் திறமையை அறிந்து, அவன் மீது அன்பும், இரக்கமும், கருணையும் காட்டி அவனோடு நட்பு பாராட்டும் கதையின் நாயகி. தன்னையும் நேசித்து, அன்பு பாராட்டும் நாயகியிடம் நடராஜ் வாய்பேச இயலாதவனாகவே நடித்து, அவளுடைய நட்பை பலப்படுத்திக் கொள்ள முயன்று, பின் அந்த நட்பு காதலாக மாறி, இறுதியில் நாயகிக்கு அவனுடைய உண்மை முகம் தெரிய வரும்போது, நாயகன் நடராஜின் நிலை என்ன? என்ற இந்தக் கதையை மிக நேர்த்தியாக திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பார் இயக்குநர் சசி.

வாய்பேச இயலாத நடராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் தனது அற்புதமான நடிப்பை வழங்க, நாயகியாக ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடிகை கவுசல்யா தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தவரும் புதியவரே. பாபி என்ற இசையமைப்பாளரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததும் இத்திரைப்படமே. படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை கவரும் வண்ணமே இருந்தது. குறிப்பாக பின்னணிப் பாடகர் ஹரிஹரன் மற்றும் சித்ரா குரல்களில் இடம்பெற்ற “சொல்லாதே சொல்லச் சொல்லாதே” என்ற பாடலும், சித்ரா தனித்துப் பாடிய “சொல்லு சொல்லு சொன்னதச் சொல்லு” என்ற பாடலும் இசை விரும்பிகள் மத்தியில் வெகு பிரபலமானது. இந்தப் படத்திற்குப் பின் பெரிய அளவில் தமிழ் திரையுலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இசையமைப்பாளர் பாபி, தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்க இயலாமல் போனது என்பது துரதிர்ஷ்டமான ஒன்று. 1998 ஆகஸ்ட் மாதம் 1 அன்று வெளிவந்த இத்திரைப்படம் இயக்குநர் சசி, நடிகர் லிவிங்ஸ்டன், இசையமைப்பாளர் பாபி ஆகியோருக்கு மட்டுமின்றி, படத்தில் பங்காற்றியிருந்த பிற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்குமே ஒரு பெரிய திருப்பத்தைத் தந்த திரைப்படமாகவே அமைந்து, 'சொல்லாமலே' ப்ளாக் பஸ்டர் ஹிட்டை தந்து. அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியைத் தந்ததென்றே சொல்லலாம் இந்த “சொல்லாமலே” திரைப்படத்தின் வெற்றியை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !