பிளாஷ்பேக்: எம்ஜிஆர், கமல் இணைந்து நடித்த ஒரே படம்
கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது ஜெமினி, சிவாஜியுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மக்கள் திலகம் எம்ஜிஆருடன் நடித்த ஒரே படம் 'ஆனந்த ஜோதி'. வில்லன் நடிகராக இருந்த பி.எஸ்.வீரப்பா தயாரிப்பாளராகி பல படங்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது எம்ஜிஆரை வைத்து தயாரித்த படம் இது. படத்தின் நாயகி தேவிகா. எம்ஜிஆருடன் தேவிகா நடித்த ஒரே படமும் இதுதான். இவர்களுடன் அசோகன், சகஸ்ரநாமம், ஜாவர் சீத்தாராமன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்தார்கள். விஸ்வநாதன் & ராமமூர்த்தி இசை அமைத்தனர். வி.என்.ரெட்டி, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினர்.
ஆனந்த் என்ற உடற்பயிற்சி ஆசிரியராக எம்ஜிஆர் நடித்தார். அவரது அப்பா கோடீஸ்வரர். அவரை யாரோ ஏமாற்றி சொத்துகளை கவர்ந்ததால் இப்போது மிடில் கிளாஸ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பார். புனைப்பெயரில் கதைகளும் எழுதி வருவார். எம்ஜிஆர் பணிபுரியும் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒன்பது வயது பாலு (கமல்ஹாசன்). அவனது அக்கா ஜோதி (தேவிகா). இருவருக்கும் காதல் தூதுவராக நடித்தார் கமல்.
இந்த படத்திற்கு பிறகு கமல், எம்ஜிஆருடன் நடிக்கவில்லை. ஆனால் அவரது படங்களில் நடன கலைஞராக பணியாற்றி உள்ளார்.