பான் இந்தியா படங்கள் : நானி சொன்ன சரியான விளக்கம்
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'பாகுபலி' படங்களுக்குப் பிறகுதான் 'பான் இந்தியா' என்ற ஒரு அடையாளம் வந்து அதிகமாகவே பிரபலமடைந்தது.
அதன்பின் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் சில படங்கள், முன்னணி நடிகர்கள் நடிக்கும் சில படங்கள் அவர்கள் படமாக்கும் மொழிகளில் மட்டுமல்லாது மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக அடையாளப்படுத்தப்பட்டு வெளியானது. அவற்றில் சில படங்கள்தான் நல்ல வசூலைக் குவித்தன. பெரும்பாலான படங்கள் சுமாரான வெற்றி அல்லது தோல்வியை சந்தித்தன.
தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள 'தி பாரடைஸ்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகப் போகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.
அப்போது 'பான் இந்தியா' என்ற அடையாளம் இல்லாமல் இந்தப் படம் வெளியாவது போல் இருக்கிறதே அதற்கான காரணம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நானி, “என் படத்தை பான் இந்தியா படம்னு சொல்ல வேண்டாம். எந்தப் படத்தையும் அப்படி அழைக்கிறதையும் நான் விரும்பல. ஹிந்திப் படங்கள் வரும் போது தென்னிந்தியாவுல அந்தப் படங்களை ஹிந்திப் படங்கள்னுதான் சொல்றாங்க, பான் இந்தியான்னு சொல்றதில்ல. 'பதான், ஜவான்' தென்னிந்தியாவுல நல்லா போன போது அதை ஹிந்திப் படங்கள்னுதான் சொன்னாங்க.
அதே சமயம் தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்கள் வட இந்தியாவுல வெளியாகும் போது அந்தப் படங்களை பான் இந்தியா படங்கள்னு சொல்றாங்க. தென்னிந்தியப் படங்களை மட்டும்தான் அப்படி அழைக்கிறாங்க. ஏன் இப்படின்னு எனக்குப் புரியலை.
என் படங்களை நான் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களுக்கான படங்களா கொடுக்கனும்னு நினைக்கிறேன். இது என் கருத்து. மத்தவங்க இப்படி சொல்றதை நான் நிறுத்த முடியாது,” என்றார்..