ஆஸ்கர் போட்டியில் இளையராஜா இசையமைத்த இன்னொரு படம்
‛கோந்தல்' திரைப்படத்தை தொடர்ந்து இளையராஜா இசையமைத்த இன்னொரு படமான ‛அந்தோனி'-யும் ஆஸ்கர் ரேஸில் பங்கேற்கிறது.
உலக சினிமாவில் உயர்ந்த விருதாக ஆஸ்கர் பார்க்கப்படுகிறது. 2027ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டு பிரிவுக்கான விருதுக்கு படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்தியா சார்பில் ‛கோந்தல்' என்ற மராட்டிய படம் ஆஸ்கர் போட்டிக்கு செல்கிறது என நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்நிலையில், இளையராஜா இசையமைத்த இன்னொரு படமும் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்கிறது. அந்த படத்தின் பெயர் ‛அந்தோனி'.
இது குறித்து அந்த படக்குழு கூறியதாவது, ‛‛வரலாற்றில் முதல் முறையாக இளையராஜாவின் இசையில் இலங்கை (ஈழத்து) தமிழ்த் திரைப்படமாக வந்த “அந்தோனி” 2027ம் ஆண்டின் சிறந்த சர்வதேச திரைப்படப்பிரிவில் ஆஸ்கர் நோக்கி பயணப்படுகிறது. கயல் வின்சன்ட், டிஜே பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பிலும், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோரின் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவாகி அண்மையில் உலகமெங்கும் வெளியான படம் இது என்று தெரிவித்துள்ளதனர்.
இதன்மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இளையராஜாவின் இரண்டு படங்கள் ஆஸ்கர் போட்டிக்கு செல்வது சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் - இளையராஜா கூட்டணியில் வெளியான தேவர் மகன், ஹே ராம் படங்கள் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.