தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை!
தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே துவா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது.
தம்பதியினர் இருவரும் இணைந்து தங்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்திருப்பதை சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 'வெல்கம் பேபி கேர்ள்' என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தொடர்ந்து, திரைத் துறையினரும் ரசிகர்களும் தம்பதியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் முதல் குழந்தையான துவா 2024-ல் பிறந்தார். நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தங்களது இரண்டாவது கர்ப்பத்தை அவர்கள் அறிவித்தனர். அப்போது தீபிகா, அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியின் ராக்கா மற்றும் ஷாருக்கானின் கிங் ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்தார்.
தொடர்ந்து தனது படப்பிடிப்புப் பகுதிகளை முடித்துக் கொடுத்த தீபிகா, மகப்பேறு விடுப்பில் சென்றார். தற்போது இரண்டாவது பெண் குழந்தையின் வருகையுடன், தீபிகா - ரன்வீர் தம்பதி நான்கு பேர் கொண்ட குடும்பமாகத் தங்களது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர்.