ரஜினியின் ‛ஜெயிலர் 2'விற்கு வழிவிட்டு ஒதுங்கிய தனுஷின் ‛ஓம்'
அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷை வைத்து ‛ஓம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜ்குமார் பெரியசாமி. இதில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. முன்னதாக அக்., 16ல் படம் ரிலீஸ் என அறிவித்து இருந்தனர். இப்போது ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக தனுஷ் வெளியிட்ட அறிக்கை : ‛‛பல ஆண்டுகளாக நாம் வியந்து பார்த்த ரஜினிகாந்த்தின் ‛ஜெயிலர் 2' படம், ஓம் படத்திற்கு ஒருநாள் முன்னதாக அக்., 15ல் வெளியாகிறது. அவர் மீது கொண்டுள்ள அளப்பரிய மரியாதையின் காரணமாக எங்களது ஓம் பட வெளியீட்டை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அதேநேரத்தில் இந்தாண்டு தீபாவளிக்கும் எங்கள் படம் வெளியாகாது. காரணம் அதேதேதியில் சூர்யாவின் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா துறையின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, பெரிய திரைப்படங்கள் பரஸ்பர புரிதலோடும் ஒருவருக்கொருவர் எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளித்தும் செயல்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்கள் புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்போம்'' என தெரிவித்துள்ளார்.