உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தனது தோல்விக் கதையையே, மீண்டும் வெற்றி பெறச் செய்ய வைத்த தயாரிப்பாளர்

பிளாஷ்பேக்: தனது தோல்விக் கதையையே, மீண்டும் வெற்றி பெறச் செய்ய வைத்த தயாரிப்பாளர்


பெரிய கல்வி ஞானமோ, பொருளாதாரப் பின்புலமோ ஏதுமின்றி ஒரு சாதாரண மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவங்கி, பின் துணை நடிகராக வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்து, தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி, ஒரு திரைப்பட தயாரிப்பாளராக தன்னை உயர்த்திக் கொண்டவர்தான் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர். “தேவர் பிலிம்ஸ்” என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, எம் ஜி ஆர், பானுமதி ஆகியோர் நடிக்க, இவர் தயாரித்த முதல் திரைப்படம்தான் “தாய்க்குப் பின் தாரம்”. 1956ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் தேவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த திரைப்படமாக அமைந்தது.

தொடர்ந்து தனது “தேவர் பிலிம்ஸ்” பதாகையின் கீழ், எம் ஜி ஆரை வைத்து “தாய் சொல்லைத் தட்டாதே”, “தாயைக் காத்த தனயன்”, “குடும்பத் தலைவன்”, “தர்மம் தலைகாக்கும்”, “நீதிக்குப் பின் பாசம்”, “வேட்டைக்காரன்”, “தொழிலாளி”, “கன்னித்தாய்”, “முகராசி”, “தனிப்பிறவி”, “தாய்க்குத் தலைமகன்” என வெற்றித் திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்த சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர், 1967ம் ஆண்டு “தண்டாயுதபாணி பிலிம்ஸ்” என்ற தனது மற்றொரு தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்து வெளியிட்ட ஒரு திரைப்படம்தான் “தெய்வச் செயல்”.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான நடிகர் மேஜர் சுந்தர்ராஜன், படத்தில் சொந்தமாக ஒரு சர்க்கஸ் கம்பெனி நடத்தி வருவதோடு, அங்குள்ள மிருகங்களை தனது சொந்தப் பிள்ளைகளைப் போல் பாவித்து, அன்பு பாராட்டி வரும் நிலையில், தனது சர்க்கஸ் தொழிலில் ஏற்பட்ட கடன்களாலும், தனது சொந்த மகன் மற்றும் மருகளாலும் பிரச்சனைகளைச் சந்திக்க, தனது மிருகங்களோடு வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் எவ்வாறு நல்ல நிலையை அடைந்து, மகன் மற்றும் மருமகளின் நல்லெண்ணங்களை சம்பாதிக்கின்றார் என்பதே இப்படத்தின் கதை.

சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர் கதை எழுதி, தயாரித்து, எம் ஜி பாலு இயக்கத்தில், மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், பாரதி விஷ்ணுவர்த்தன், எஸ் வி ராமதாஸ் ஆகியோரது நடிப்பில், 1967ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறி, ஒரு தோல்விப் படமாகவே அமைந்திருந்தது சின்னப்ப தேவருக்கு. இத்திரைப்படம் வெளிவந்து சரியாக நான்கு ஆண்டுகள் கழித்து, 1971ம் ஆண்டு மீண்டும் இதே கதையை ஹிந்தியில் அப்போதைய பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான நடிகர் ராஜேஷ் கண்ணாவை வைத்து “ஹாத்தி மேரே சாத்தி” என்ற பெயரில் தனது “தேவர் பிலிம்ஸ்” பேனரிலேயே திரைப்படமாக எடுத்து வெளியிட, படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, வசூலை வாரி வழங்கியது சின்னப்ப தேவருக்கு.

இந்த மாபெரும் வெற்றியைச் சுவைத்த சின்னப்ப தேவர், ஹிந்தியில் வெற்றி பெற்ற இந்தக் கதையை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வந்து, எம் ஜி ஆரை நாயகனாக்கி, “நல்ல நேரம்” என்ற பெயரில் வண்ணத் திரைப்படமாக வழங்கினார். ஹிந்தித் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எம்.ஏ திருமுகம்தான் தமிழ் திரைப்படமான “நல்ல நேரம்” திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். எம் ஜி ஆர், கே ஆர் விஜயா, எஸ் ஏ அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், சச்சு, எஸ் வி ராமதாஸ், வி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்திற்கு 'திரையிசைத் திலகம்' கே வி மகாதேவன் இசையமைத்திருந்தார்.

“தேவர் பிலிம்ஸ்” தயாரிப்பில் எம் ஜி ஆர் நடித்த கடைசித் திரைப்படமாகவும், அந்நிறுவனம் தயாரித்த முதல் வண்ணத் திரைப்படமாகவும் அமைந்திருந்த இந்த “நல்ல நேரம்” திரைப்படமும் தேவருக்கு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமாகவே அமைந்திருந்தது. அந்த வகையில் முதல் முயற்சியில் தோற்றுப் போன தனது “தெய்வச் செயல்” படத்தின் கதையையே ஹிந்தி மற்றும் தமிழில் வேறு நடிகர்களை வைத்து, மீண்டும் மீண்டும் தந்து தொடர் வெற்றியைப் பதிவு செய்த ஒரு சாதனைத் தயாரிப்பாளராகத்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !