ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் வருமான வரி சோதனை
தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அவரது வீட்டிலும், அவரது மாமனார் பிரபல தயாரிப்பாளர் வாசு பக்னானி வீட்டிலும் மும்பை வருமான வரித் துறையினர் 12 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
திரைப்படங்களுக்கான முதலீடுகள், வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான நிதியுதவிகள் சார்ந்து இந்த சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படத் தயாரிப்பு பணிகள் என வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தயாரிப்பாளர் வாசு பக்னானி, பூஜா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது மகன் ஜாக்கி பக்னானியைத்தான் ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிறுவனம் சுமார் 30க்கும் மேற்பட்ட ஹிந்திப் படங்களைத் தயாரித்துள்ளது. அதில் சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படங்கள்.
ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள 'ராமாயணா' இந்த வருட தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் ரகுல், சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.