உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக பஹத் பாசிலுடன் பணியாற்ற விரும்புகிறேன் : ராஜமவுலி

ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக பஹத் பாசிலுடன் பணியாற்ற விரும்புகிறேன் : ராஜமவுலி

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் இயக்குனர் ஷஷாங் இயக்கத்தில் சமீபத்தில் டோன்ட் டிரபுள் தி டிரபுள் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த படத்திற்காக ஆந்திரா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று புரமோஷன் செய்தார் ராஜமவுலி.

அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் பஹத் பாசில் குறித்து அவர் பேசும்போது, பஹத் நடித்த ட்ரான்ஸ் திரைப்படமும், ஆவேசம் திரைப்படமும் எனக்கு ரொம்பவே பிடித்தமானவை. அதேசமயம் பஹத் பாசில் நடித்த ஜோஜி திரைப்படத்தை பார்த்த பிறகு அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். அதில், 'நீங்கள் ஒரு நச்சுப் பாம்பைப் போன்றவர்; இந்த படத்தை நிறுத்த வேண்டும் என நினைத்தேன், ஆனால் எப்படி நிறுத்துவது என்று எனக்கு தெரியாமல், அந்த அளவுக்கு இந்தப் படம் என்னை கட்டிப்போட்டுவிட்டது' என கூறி இருந்தேன்.

நான் எப்போதுமே அவரிடம் சொல்வதுண்டு. நான் அவரை வெறுக்க விரும்புகிறேன், ஆனால் அவர் மீது எனக்கு பாசம் உள்ளது. பஹத் பாசில் தனது கதாபாத்திரங்களை எப்படி உள்வாங்கிக் கொண்டு நடிக்கிறார் என்பதன் ரகசியத்தை நேரில் தெரிந்து கொள்வதற்காகவே அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ராஜமவுலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !