'ஜெயிலர் 2' டிரைலர் : தொடரும் ஹிருத்திக் ரோஷன் சஸ்பென்ஸ்
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' படத்தின் டிரைலர் நேற்று மாலை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
ரஜினி ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்தற்கும் மேலாக டிரைலர் அமைந்துள்ளது என்பதை அதில் உள்ள கமெண்ட்டுகளைப் பார்க்கும் போது தெரிகிறது.
டிரைலரில் ரஜினிகாந்த் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்ஜே சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி, யோகி பாபு மற்றும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால், ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
மோகன்லால் அடுத்து ஒரு நடிகர் இருட்டில் நடந்து செல்லும் ஒரு வினாடி காட்சியும் இடம் பெற்றுள்ளது. அது ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் என ஹிந்தி டிரைலரில் பல கமெண்ட்டுகளைப் பார்க்க முடிகிறது. முதலில் அந்தக் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிப்பார் என்று தகவல் வெளியானது. அதன்பின் ஹிருத்திக் நடித்தார் என்றார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
டிரைலரில் இடம் பெற்றுள்ள அந்த நடிகர் ஹிருத்திக் தானா என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை அந்த சஸ்பென்ஸ் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.