உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படிக்கட்டில் நின்று ஒன்றரை மணி நேரம் படம் பார்த்தேன் : பிரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

படிக்கட்டில் நின்று ஒன்றரை மணி நேரம் படம் பார்த்தேன் : பிரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

சென்னையில் நடந்த அன்பில் அவன் வெற்றி விழாவில் ஹீரோயின் ப்ரீத்தி முகுந்தன் பேசியதாவது, “இந்த படத்துக்காக பல நாட்கள் இணைந்து பணியாற்றினோம். இப்போது இந்தப் படத்தைப் பற்றி நாங்கள் கடைசியாக மேடையில் பேசுகிறோம் என்று நினைக்கும்போது உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. இனிமேல் இந்த படத்துக்காக இணைவோமா என தெரியவில்லை. படத்தைப் பற்றிய அனைத்து விமர்சனங்களையும் படித்தேன். படம் எப்படி இருக்கிறது என்பதைத் தாண்டி, அதன் பின்னால் இருக்கும் உழைப்பையும், ஆர்வத்தையும் கவனித்து மிகவும் அழகாக விமர்சனங்களை எழுதியிருந்தீர்கள்.

படம் வெளியானதிலிருந்து ரசிகர்களிடமிருந்து நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக பெண்களும் இளம் பெண்களும் தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. ஒரு திரைப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொட்டு, அவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது என்றால், அதுவே மிகப்பெரிய விஷயம். எனக்குப் பிடித்த சில திரைப்படங்கள் என் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேபோல, நாங்கள் உருவாக்கிய ஒரு படம் மற்றவர்களின் மனதிலும் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதை ஒரு வரமாகத்தான் பார்க்கிறேன்.

இந்தப் படத்தை முதன்முதலில் பார்த்த அனுபவம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அப்போது எனக்கு ஏற்பட்ட பதற்றத்தால், படத்தைத் தொடக்கத்திலிருந்து திரையரங்கில் அமர்ந்து பார்க்க முடியவில்லை. படம் ஓடிக்கொண்டிருந்தபோது உள்ளே சென்று, பக்கவாட்டுப் படிக்கட்டில் நின்றபடியே பார்க்கத் தொடங்கினேன். இயக்குனர் கார்த்திக், அசோக் உள்ளிட்ட படக்குழுவினரும் அப்போது என்னுடன் இருந்தார்கள். அப்படியே சுமார் ஒன்றரை மணி நேரம் நின்று கொண்டே முழுப் படத்தையும் பார்த்தேன். அப்போது கண்களில் கண்ணீர் வந்தது. படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதைத் தாண்டி, நாங்கள் உருவாக்கிய படத்தைப் பார்த்து மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அழகாகவும் படம் அமைந்திருந்தது. ஒரு நடிகையாக இப்படிப்பட்ட திரைப்படத்தில் நடிப்பது உண்மையிலேயே ஒரு வரம். எதிர்காலத்தில் இந்தப் படத்தைத் திரும்பிப் பார்க்கும்போதும், இதில் நடித்ததற்காகப் பெருமைப்படுவேன். ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

இளந்திரயன் வேலந்தாவளம்
2026-10-07 18:51:11

இந்த பதிவை படிக்கும் போது ... தினமலர் விமர்சனம் கண்ணுக்குள் வந்தது... சிரித்துகொண்டேன்