உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டோரதி'யை தவறாக பேசியவர்களால் கவலையில்லை: கார்த்திக் சுப்பராஜ்

'டோரதி'யை தவறாக பேசியவர்களால் கவலையில்லை: கார்த்திக் சுப்பராஜ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'டோரதி'. கிராமத்து ரவுடியிச கதையாக நகரும் படம், பின்னர் திருநங்கைகள் பற்றிய படமாக வேறு தளத்திற்கு மாறிச் செல்கிறது. அதாவது, உயிர் நண்பன் திருநங்கையாக மாறுவதும், அதை அந்த நண்பனும், சமூகமும் எப்படி ஏற்கிறார்கள் என்பதுமாக கதை நகர்கிறது. இதற்கு குறிப்பிட்ட தரப்பினர் வரவேற்றாலும், சிலர் எதிர்கருத்தை பதிவிட்டனர். சமூக வலைதளங்களில் இது விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், கார்த்திக் சுப்பராஜ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குனர்கள் மிஷ்கின், வசந்த பாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது: மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறேன். 'டோரதி' கதை எனக்குள் எப்போது எங்கே உருவானது எனத் தெரியவில்லை. முதன்முறையாக ஒரு திருநங்கை அக்காவை பார்த்தது இன்றும் நினைவில் இருக்கிறது. ஆணாக பிறப்பதை பெருமிதமாக பார்க்கும் சமூகத்தில் ஆண் உடலுக்குள் பெண்ணை கண்டவன், அவளை காதலிக்கவே செய்வான். அந்த பயணம் தான் டோரதியில் இருக்கிறது.

டோரதியைப் பார்த்த பல ஆண்கள் கண்ணீர்விட்டு இனிமேல் திருநங்கைகளைப் பார்க்கும் பார்வை மாறும் எனச் சொன்னதுதான் இப்படத்தின் தனிப்பட்ட வெற்றியாக பார்க்கிறேன். இளையராஜா இசை இல்லையென்றால் இப்படம் இவ்வளவு தூரம் சென்றிருக்காது என்பதை நானே உறுதியாக நம்புகிறேன். இப்படத்தைத் தவறாக பேசியவர்களால் நான் எந்தக் கவலையும் படவில்லை. நான் என் ரசிகர்களை நம்பினேன். அவர்கள் இந்த வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள்.

இலுமினாட்டி படமா

டோரதி படத்தை இலுமினாட்டி படம் என பல வதந்திகள் வந்தது. ஏனெனில் படத்தில் காண்பிக்கப்பட்ட டாலரை வைத்து இலுமினாட்டி என்றனர். படத்தின் காஸ்ட்யூம் டிசைனரிடம் இந்த டாலரை எங்கு வாங்கினீர்கள் எனக் கேட்டதற்கு, கடைசி நேரத்தில் திருமங்கலத்தில் உள்ள பேன்சி ஸ்டோரில் வாங்கியதாக கூறினார். இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்பாய்லர் டிரைலர்

இதற்கிடையே இன்று (அக்.,8) டோரதி படத்தின் 'ஸ்பாய்லர் டிரைலர்' வெளியிடப்படும் என கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார். வெளியிடும் நேரத்தை குறிப்பிடாமல், எந்த நேரத்திலும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !