உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இறுதி பக்கம் 2'ம் பாகம் தயாராகிறது

'இறுதி பக்கம் 2'ம் பாகம் தயாராகிறது

பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய வெற்றி பெற்ற படங்களின் 2ம் பாகம் அதிக அளவில் தயாராகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது சிறு பட்ஜெட் படங்களின் 2ம் பாகங்களும் தயராகி வருகின்றன. அவற்றில் ஒன்று 'இறுதி பக்கம்'. 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் 2ம் பாகம் இப்போது தயாராகிறது.

முதல் பாகத்தை இயக்கிய மனோ வெ.கண்ணதாசன் 2ம் பாகத்தையும் இயக்குகிறார். இப்படத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மற்றும் 'குமார சம்பவம்' புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன், அபிஷேக் ஜோசப், சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் கூறும்போது “மர்மம், விசாரணை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய எமோஷனல் திரில்லராக முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் அடுத்த பாகமான 'இறுதிப் பக்கம் 2'வும் அதேபோன்று பரபரப்பான திரில்லர் களத்தில் உருவாகியுள்ளது. முந்தைய படத்தின் தொடர்ச்சியாக மட்டுமின்றி, புதிய கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் மையக் கதையில் ஒரு கொலை நடைபெறுகிறது. அந்தக் கொலையை யார் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு தரப்பு தீவிரமாகத் தேடுகிறது. அதே நேரத்தில், கொலையைச் செய்தவர்கள் தங்களுடைய குற்றம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக அதை மறைக்க மற்றொரு தரப்பு முயற்சி செய்கிறது. இவ்வாறு, கொலையை கண்டுபிடிக்க முயலும் ஒரு தரப்புக்கும், அதை மறைக்க முயலும் மற்றொரு தரப்புக்கும் இடையே நடைபெறும் ஆடு-புலி ஆட்டமே இப்படத்தின் திரில்லர் பயணமாக அமைந்துள்ளது”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !