உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிறிய ஹீரோக்களின் வெற்றியில் செப்டம்பர் 2026

சிறிய ஹீரோக்களின் வெற்றியில் செப்டம்பர் 2026


2026ம் ஆண்டின் 9வது மாதம் கடந்து போய்விட்டது. இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இருக்கிறோம். கடந்த செப்டம்பர் மாதத்துடன் தமிழ் சினிமாவில் 170 படங்கள் வரை தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் அதிகமான படங்கள் வெளிவந்த மாதங்களில் ஒன்றாக அந்த மாதம் இருந்தது. மொத்தம் 22 படங்கள் அந்த மாதத்தில் வெளியாகி உள்ளன.

22 படங்களில் வரவேற்பு ரீதியாக, வசூல் ரீதியாக மூன்று படங்கள் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. ஓரிரு படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றதால் அந்தப் படங்களுக்கு சக்ச்ஸ் மீட்டையும் நடத்தினார்கள். ஒரே மாதத்தில் இத்தனை படங்கள் குறிப்பிடத்தக்க வசூலையும், வரவேற்பையும் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல.

செப்டம்பர் 4ம் தேதியில், “4 இடியட்ஸ், ஆக்குவாய் காப்பாய், இம்மார்டல், மைத்ரி, நாகரீக பயணம், ஏன் என்னை ஏதோ செய்தாய்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களில் 'இம்மார்டல்' படம் மட்டும் ஜிவி பிரகாஷ்குமார் நடித்து வெளிவந்ததால் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்தது. படம் வெளியான நாட்களில் இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றது என்றார்கள். படத்திற்கான சக்சஸ் மீட்டையும் நடத்தினார்கள்.

செப்டம்பர் 10ம் தேதி 'மண்டாடி, சர்தார் 2' ஆகிய படங்கள் வெளிவந்தன. கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'சர்தார் 2' படம் எதிர்பாராத விதத்தில் படுதோல்வியை சந்தித்தது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரானதாக சொல்லப்பட்ட படம் 20 கோடி வசூலை மட்டுமே பெற்றது என்றார்கள். இப்படத்தின் முதல் பாகம் 2022ல் வெளிவந்து 100 கோடி வசூலைப் பெற்று வெற்றி பெற்றது.

சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'மண்டாடி' திரைப்படம் ஆச்சரியமூட்டும் விதத்தில் பெரிய வரவேற்பையும், வசூலையும் குவித்தது. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்த ஆண்டின் பெரிய வசூல் படங்களில் ஒன்றாக அமைந்தது. ஒரு சிறிய ஹீரோ இந்த அளவிலான வசூலைப் பெற்று திரையுலகினரை ஆச்சரியப்படுத்தினார்.

செப்டம்பர் 17ம் தேதி 'என்ன விலை', செப்டம்பர் 18ம் தேதி “பீப், கோல்டு கால், லட்சியவாதி, நல்ல படம், பாவை, பாரிஸ் கபே, ராவணி, சண்டக்காரி, தி டார்க் ஹெவன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'தி டார்க் ஹெவன்' படம் பரபரப்பான த்ரில்லர் படமாக அமைந்து விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. படமும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றதாக படக்குழுவினர் சக்சஸ் மீட் வைத்து கொண்டாடினார்கள்.

செப்டம்பர் 25ல் 'டோரதி, லெனின் பாண்டியன், மீசைய முறுக்கு 2, தி கிராண்ட் மாஸ்டர்' ஆகிய படங்கள் வெளிவந்தன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த 'டோரதி' படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. பெரிய வசூல் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க வசூல் இந்தப் படத்திற்கு மூன்றாவது வாரத்திலும் வந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடித்த ரிஷிகாந்த்திற்கு ஆகஸ்ட்டில் வெளிவந்த 'மொத ராத்திரி' படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படமும் அடுத்த வரவேற்பைத் தந்துள்ளது. மற்றொரு நாயகனாக நடித்த சனந்த்-தும் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

அதே நாளில் ஹிப்ஹாப் தமிழா இயக்கி, நாயகனாக நடித்து வெளிவந்த 'மீசைய முறுக்கு 2' படம் இளம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து படக்குழுவினர் சக்சஸ் மீட்டைக் கொண்டாடவும் வைத்தது. 2017ல் வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம் லாபத்தைத் தந்தாலும் 50 கோடி வசூலைப் பெறவில்லை. தொடர்ந்து சில படங்களின் தோல்வியால் தவித்து வந்த ஹிப்ஹாப்புக்கு இந்தப் படத்தின் வெற்றி மிக முக்கியமாக அமைந்துள்ளது.

2026ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரையிலான எட்டு மாதங்களில், வெளியான 140க்கும் மேற்பட்ட படங்களில் 10 படங்கள்தான் வசூல் ரீதியாக லாபத்தையும் தந்த படங்களாக இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அதே சமயம் கடந்த மாதமான செப்டம்பர் மாதத்தில் வெளியான 22 படங்களில் 3 படங்கள் வசூல் ரீதியாக லாபத்தைத் தந்துள்ளதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக சிறிய ஹீரோக்களான 'சூரி, ஹிப் ஹாப் தமிழா, ரிஷிகாந்த், சனந்த்' ஆகியோருக்கான வெற்றியாகவும் அமைந்துள்ளது. வரவேற்பு, வசூல் என கடந்த செப்டம்பர் மாதம் கொஞ்சம் ஸ்பெஷலான மாதமாகவே நிறைவடைந்துள்ளது.

2026 செப்டம்பர் மாதத்தில் வெளியான படங்கள்…

செப்டம்பர் 4

4 இடியட்ஸ், ஆக்குவாய் காப்பாய், இம்மார்டல், மைத்ரி, நாகரீக பயணம், ஏன் என்னை ஏதோ செய்தாய்

செப்டம்பர் 10

மண்டாடி, சர்தார் 2

செப்டம்பர் 17

என்ன விலை

செப்டம்பர் 18

பீப், கோல்டு கால், லட்சியவாதி, நல்ல படம், பாவை, பாரிஸ் கபே, ராவணி, சண்டக்காரி, தி டார்க் ஹெவன்

செப்டம்பர் 25

டோரதி, லெனின் பாண்டியன், மீசைய முறுக்கு 2, தி கிராண்ட் மாஸ்டர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !