நஷ்டம் ஏற்படுத்துவது யார்?: திருப்பூர் சுப்பிரமணியதிற்கு இயக்குனர்கள் சரமாரி கேள்வி
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்தவர் திருப்பூர் சுப்பிரமணியம். திரைப்பட விநியோகம், திரைப்பட நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முக்கியமானவராக பார்க்கப்படும் அவர் யுடியூப் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில் ஒரு அறிமுக இயக்குனரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் குறித்து பேசியிருந்தார். யார் பெயரையும் குறிப்பிடாமல் அவர் பேசியது வைரலானது.
திருப்பூர் சுப்பிரமணியம் பேசியதாவது: அறிமுக இயக்குனர் ஒருவர் ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு முதல் படம் எடுத்தார். அப்போதே அதே தயாரிப்பாளர், அடுத்த படத்தையும் தயாரிக்க ரூ.20 லட்சம் சம்பளத்தில் அந்த இயக்குனரிடம் ஒப்பந்தம் போட்டார். முதல் படம் வெற்றிப்பெற்றது. 2வது படம் பிரபல நடிகரை வைத்து தயாரிப்பாளர் தயாரிக்கிறார். அதற்கு அந்த இயக்குனர் சிறிய நடிகர் என்று பெரிய நடிகரை வைத்து தயாரிக்கிறீர்கள்? என்று கேட்டார். அப்போது, தயாரிப்பாளர் அவரிடம் எவ்வளவு ஊதியம் வேண்டும்? என்று கேட்டபோது அவர் 1 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். பின்னர், ரூ.75 லட்சத்திற்கு சம்பளம் பேசப்பட்டது.
9 கோடியான கடன்
படம் ஏறத்தாழ 70 சதவீதம் படம் முடிந்தும் ஹீரோவுக்கும் இயக்குனருக்கும் படம் திருப்தி இல்லை. அதனால் மீண்டும் படப்பிடிப்பு நடத்துகின்றனர். 4 ஆண்டுகளாக எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த தயாரிப்பாளர் பைனான்சியரிடம் 4.5 கோடி கடன் வாங்கியிருக்கிறார். தற்போது வட்டியுடன் 9 கோடியாக அதிகரித்துள்ளது என்கிறார். தயாரிப்பாளர்கள் முதுகெலும்பு இல்லாமல் இருக்கின்றனர். உண்மை இருந்தால் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு அந்த இயக்குனரை பற்றி சொல்ல வேண்டியதுதானே. இதனை எந்த தயாரிப்பாளரும் செய்வதில்லை. இதனால் தான், நடிகர்கள், இயக்குனர்கள், காமெடியன்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் அட்ராசிட்டி அதிகமாகியுள்ளன. இவ்வாறு குற்றம்சாட்டியிருந்தார்.
யார் அந்த இயக்குனர்?
திருப்பூர் சுப்பிரமணியம் அளித்த பேட்டி வைரலான நிலையில், யார் அந்த இயக்குனர், தயாரிப்பாளர் என சமூக வலைதளத்தில் பலரும் பலவிதமான பெயர்களை யூகங்களை அடுக்கினர். ஒருசிலர் 'டைரி' படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் என்றும், அதன் தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் தான் என்றும் குறிப்பிட்டனர். அதே தயாரிப்பாளரின் கீழ் தான் அடுத்த படமாக ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் நடிக்க 'புல்லட்' படம் துவங்கியது. இன்னும் ரிலீசாகவில்லை. எனவே, அதனை தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்றனர்.
அஜய் ஞானமுத்து
இதற்கிடையே 'இமைக்கா நொடிகள், கோப்ரா, டிமான்டி காலனி' படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது: முற்றிலும் சரி! இது போன்ற நெறிமுறையற்ற இயக்குனர்களைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். தயவுசெய்து அதைச் செய்யுங்கள். ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பிலும் சில தவறுகள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்; அதனால்தான் அவர்கள் வெளிப்படையாகப் பேசாமல், வெறும் வதந்திகளைப் பரப்பி ஒரு இயக்குனர் அல்லது தொழில்நுட்பக் கலைஞரின் நற்பெயரைக் கெடுக்க முயற்சிக்கிறார்கள்!
நானும் இது போன்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறேன்; அதை வெளிப்படையாகப் பேசித் தீர்க்க முற்பட்டபோது, அந்த விஷயத்தைக் கைவிட்டுப் பெரிதாக்க வேண்டாம் என்று என்னிடம் கூறப்பட்டது. உங்கள் வசம் உண்மையான ஆதாரங்கள் இருந்தால், அதற்காகத் தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் போன்றவை உள்ளனவே! அப்படியிருக்க, அதை ஒரு பிரச்னையாக முன்னெடுக்க உங்களைத் தடுப்பது எது?? வதந்திகளைப் பரப்பி ஒருவரின் தொழில் வாழ்க்கையைச் சிதைப்பதற்குப் பதிலாக, தயவுசெய்து உண்மையை நிரூபியுங்கள்.
சுப்பிரமணியன் சார் போன்ற மூத்த ஆளுமைகளிடம் ஒரு வேண்டுகோள்: இவர்கள் சொல்வதை அப்படியே கண்மூடித்தனமாக நம்பிவிடாதீர்கள். ஒரு தயாரிப்பாளர் மீதான அக்கறையால் நீங்கள் அப்படிச் செய்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால், ஒருவர் மீது பழி சுமத்துவதற்கு முன் உண்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவர்கள் மிகவும் சாதாரணப் பின்னணியிலிருந்து வந்து, சினிமாவின் மீதான ஆர்வத்தால் இத்துறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் போராடுபவர்கள். தயவுசெய்து அவர்களின் நற்பெயரைச் சிதைத்துவிடாதீர்கள்!. இவ்வாறு அதில் பதிவிட்டிருந்தார்.
இன்னாசி பாண்டியன் விளக்கம்
இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் இன்னாசி பாண்டியன் அளித்த விளக்கம்: வரமாட்டங்க சார்!!! வரமாட்டாங்க!!! பெரும் புள்ளிகளை வைத்து படமெடுத்தவர். ஒரு சாதாரண இயக்குனர் 70 சதவீதம் எடுத்த படத்தை நல்லா இல்லையென்று மீண்டும் எடுக்க விட்டுவிடுவாரா? இதை முதலில் நம்புவதற்கு உகந்ததா? அதும் புரமோஷனல் ஆக்டிவிட்டி வேறு தனியாக நடத்துகிறார்கள். இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை!! மொட்டைகடிதாசி. இது அதிகாரப்பூர்வமான நிலையை எட்டினால், அப்போது இது குறித்துப் பேச நான் காத்திருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் பார்க்கையில் திருப்பூர் சுப்பிரமணியன், இயக்குனர் இன்னாசி பாண்டியன் குறித்து தான் பேசியது தெளிவாகிறது. மேலும், அவர் தரப்பில் விளக்கம் கொடுத்தாலும், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் வெளிப்படையாக பிரச்னையை கூறினால் மட்டுமே இதில் தெளிவு கிடைக்கும் என்கின்றனர் கோலிவுட்டில்.