பிளாஷ்பேக்: பாடல்களால் தோல்வி அடைந்த படம்
1951ம் ஆண்டு வெளியான 'தீதார்' என்ற இந்திப் படம் பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக அதன் பாடல்கள் பட்டி ரொட்டி எங்கும் பரவியது. இந்தப் படத்தை 1963 ஆம் ஆண்டு தமிழில் 'நீங்காத நினைவு' என்ற பெயரில் ரீமேக் செய்தனர். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் டபிள்யூ. ஆர். சுப்பாராவ் இயக்கினார்.
ஆனால் இந்திப் படம் அளவிற்கு தமிழில் இந்த படம் வெற்றி பெறவில்லை அதற்கு காரணம் பாடல்கள். இந்திப் பதிப்பின் வெற்றிக்கு, இசை மேதை நௌஷத் அமைத்த மயக்கும் இசையே முக்கிய காரணமாக இருந்தது. தமிழ் பதிப்பிற்கு கே.வி மகாதேவன் இசையமைத்தார். இந்தி பாடல்களின் மெட்டை அப்படியே பயன்படுத்தி இசையமைத்தார். ஆனால் அது தமிழ் மக்களிடம் பிரபலமாகாததால் படமும் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்தி பாடல் மெட்டை பயன்படுத்தாமல் கே.வி. மகாதேவன் தனது சொந்த மெட்டுகளை பயன்படுத்தி இருந்தால் பாடல்கள் வெற்றி பெற்றிருக்கும் என்கிற விமர்சனம் அப்போது எழுந்தது.
கண்பார்வை இழந்த எஸ்.எஸ். ராஜேந்திரன், டாக்டர் கல்யாண குமாரிடம் சிகிச்சை பெறுகிறார். அப்போது தான் சிறுவயதில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அவளைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் மணந்தால் அவளையே மணப்பேன் என்றும் கூறுகிறார். ஒரு கட்டத்தில் தான் சிறுவயதில் காதலித்த பெண்ணைத்தான் டாக்டரும் காதலிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் எஸ்.எஸ். ராஜேந்திரன் சிகிச்சை கைவிட்டு தொடர்ந்து பார்வையற்றவனாகவே வாழ முடிவு செய்வதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன், கல்யாண்குமார், ஆர். விஜயகுமாரி, புஷ்பலதா, வி.கே. ராமசாமி, டி.வி. நாகேஷ், சி.ஆர். மனோரமா, எஸ். ராமராவ், 'மாஸ்டர்' மோகன், 'பேபி' சாவித்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.