கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ‛மண்டாடி' வில்லன் நடிக்கும் புதிய படம்
சமீபத்தில் சூரியன் நடிப்பில் வெளியான மண்டாடி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் சூரிக்கு நண்பராக இருந்து வில்லனாக மாறும் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுகாஷ் நடித்திருந்தார். இந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தெலுங்கு சினிமாவில் நுழைந்துள்ளது. முதல் கட்டமாக நான்கு படங்களை தயாரிக்க உள்ள நிலையில், முதல் படமாக சுகாஷ் நடிக்கும் படத்தை அறிவித்துள்ளது.
இந்த படத்தை ராஜேந்திர பாலா என்பவர் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். ‛ஹைட் அண்ட் சில்க்' என தலைப்பு வைத்துள்ளனர். நாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். இவர்களுடன் தனிகெல்லா பரணி, நந்து, கருணாகரன் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
வெளியாகியுள்ள டைட்டில் ப்ரோமோ, படத்தின் தனித்துவமான உலகத்தை அறிமுகப்படுத்துகிறது. அதில், பட்டுப் புடவைகளை நெய்யும் நெசவாளரின் வாழ்க்கையும், நவீன காலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று சந்திக்கும் தருணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படத்தை உருவாக்கி வெளியிட உள்ளனர்.