உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியலுக்கு வருவது உறுதி? நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் 'இயக்கமாக' மாற்றம்

அரசியலுக்கு வருவது உறுதி? நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் 'இயக்கமாக' மாற்றம்


கோவையில் இன்று நடந்த நடிகர் தனுஷ் ரசிகர் மன்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தனுஷ் நடிப்பில் வர இருக்கும் 'ஓம்' படத்தை வெற்றி படமாக்குவது எப்படி என இந்த ஆலோசனை கூட்டத்தில் நடந்தததாக கேள்வி. இதில் மகளிர் அணி, இளைஞர்கள் அணி, வெளிநாட்டு அணி உட்பட பல்வேறு அணியை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள், மற்ற நிர்வாகிகள் கலந்து இருக்கிறார்கள். வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் முடிவில் 'இனியும் அனைத்து இந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் மன்றம் பெயரில் இயங்க வேண்டாம். இனி, நம் மன்றம், தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றப்படுகிறது' என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, தனுஷ் நற்பணி இயக்கத்துக்கு புது கொடி, புது லோகோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இந்த கொடி, லோகோ, பெயரே பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 'இதோ வருகிறார்' என்ற தலைப்பில் பாடல் ஒலிக்க, அந்த லோகோ வெளியிடப்பட்டுள்ளது. அதன் உள் அர்த்தத்தை புரிந்துகொண்டவர்கள் உற்சாகமாக கலைந்து இருக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் தனுஷ் ரசிகர் மன்ற முக்கியமான நிர்வாகிகள் கலந்து இருக்கிறார்கள். ஆனால், தனுஷ் கலந்துகொள்ளவில்லை. அவர் உத்தரவு அல்லது ஆலோசனையின்படியே இவை அனைத்தும் நடப்பதாக தகவல். தமிழக சட்டசபை தேர்தல் வெற்றிக்குபின் நடிகர் தனுஷ் ரசிகர் மன்ற பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ரசிகர் மன்ற எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. உறுப்பினர்கள் சேர்க்கை பெரிதானது. பல மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. சென்னையை அடுத்து நடந்த ரசிகர் மன்ற கூட்டத்தில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாக பேசினார். அவர் கட்சியின் பெயர் 'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற செய்தி கூட வந்தது. அந்த பெயரை மட்டும் தனுஷ் தரப்பு மறுத்தது. ஆனால், மற்ற பணிகள் குறித்து விரிவாக பேசவில்லை.

நீங்க அரசியல் கட்சி தொடங்கப்போறீங்களா என்ற கேள்விக்கு நடிகர் சிரித்துகொண்டே எஸ்கேப் ஆனார். நான் அரசியலுக்கு வரவில்லை என சொல்லவில்லை. ஆக, அவர் மனதில் அரசியல் ஆசை இருக்கிறது. அதனால்தான் மன்றத்தை இயக்கமாக மாற்றியுள்ளார். ஒரு காலத்தில் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் கூட, 2009ம் ஆண்டு மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. 2024ல் தவெகவாக மாறியது. அந்த பாணியில் தனுஷ் மன்றமும் செயல்படுகிறது. விரைவில் தனுஷ் அரசியலுக்கு வருகிறார். 2031 தேர்தலில் களம் இறங்குகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !